சிவனின் கண்ணீரில் உருவானதா ருத்ராட்சம்? வியக்க வைக்கும் வரலாறு!

சிவனின் கண்ணீரில் உருவானதாக கூறப்படும் ருத்ராட்சத்தின் மகிமைகளும் , அதன் ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் யார் அணியலாம், ருத்ராட்சம் தரும் நன்மைகள் கூறும் தகவல்களை விரிவாகப் பார்போம்.

Sep 21, 2026 - 07:00
சிவனின் கண்ணீரில் உருவானதா ருத்ராட்சம்? வியக்க வைக்கும் வரலாறு!

பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி

சிவ பக்தியில் மிக மிக முக்கியமான அங்கமாக இருப்பது ருத்ராட்சம். ருத்ரன் என்றால் சிவன் என்று அர்த்தம். ருத்ராடம் அணிவதில் இன்னமும் பலருக்குக் குழப்பங்களும் சந்தேகங்களும் இருக்கின்றன. ஆண்களில் பிரம்மச்சாரிகள் தான் அணியவேண்டுமா? பெண்கள் அணியலாமா கூடாதா? எப்போதும் அணிந்திருக்கலாமா என்று பல கேள்விகள், பலப்பல குழப்பங்கள்!

’’ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும்போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறந்த நிகழ்வுக்குச் சென்றிருக்கும் போதும் என எல்லாக் காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம். எப்போதும் அணிந்திருக்கலாம்’ என விவரிக்கிறது சிவ புராணம்! .

’’சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் கல்வி, ஞானம் என திறமைகள் பளிச்சிடும். கலைகளில் சிறந்துவிளங்குவார்கள். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்கசுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களின் தாலிபாக்கியம் நிலைக்கும். ஆயுள் நீடிக்கும். கணவருக்கு தொழிலில் மேன்மையும், வெற்றியும் கிடைக்கும்.

இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும்! இன்னும் சொல்லப்போனால், பெண்கள் அவசியம் ருத்ராட்சம் அணியவேண்டும்.. எல்லா காலத்திலும் எல்லா வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டிருக்கலாம். இதனால் பாவமும் இல்லை; தோஷமும் கிடையாது. ருத்ராட்சம்  என்பது சிவாம்சம்; சிவச்சின்னம். நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்’’ என விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

நாரத முனிவருக்கு பழம் ஒன்று கிடைத்தது. அந்தப் பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காட்டினார். இது என்ன பழம்? இந்தப் பழத்தை இதுவரை நான் பார்த்ததும் இல்லை; சாப்பிட்டதுமில்லை என்று கேட்டார்.

அதற்கு திருமால், ’திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் சர்வ வல்லமை படைத்தவன். பிரம்மாவிடம் வரம் பெற்ற அரக்கன் அவன். அந்த கர்வத்தினால் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். அப்போது, தேவர்கள் என்னிடம் வந்து அந்த அரக்கனை அழிக்கும்படி வேண்டினார்கள். நான் அவர்களை அழைத்துக்கொண்டு ஈசனிடம் சென்றேன். அவரிடம் முறையிட்டோம்.

சிவபெருமான், தேவர்களின் சக்தியை ஒரேசக்தியாக மாற்றினார். மிகப்பெரிய வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம். தேவர்களைக் காக்கவேண்டுமெனில், திரிபுராசுரனை அழிக்கவேண்டும். கண்களை மூடாமல் அகோர அஸ்திர நிர்மாணத்திற்காக சிவபெருமான் கடும் தவமிருந்தார்.

அப்போது மூன்று கண்களையும் அவர் மூடும்போது, பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. ஒவ்வொரு துளியும் ருத்ராட்சமாக மாறின. அந்த ருத்ராட்சம் ஒருமரத்தில் விழுந்தது. அந்த மரம், அப்படியே ருத்ராட்ச கிளைகளாக, காய்களாக, குலுங்கின. ருத்ராட்சம் எனும் மரம் இந்த பூமிக்கு வந்த சரிதம் இது’ என மகாவிஷ்ணுவே ருத்ராட்சம் குறித்துச் சொல்லியதாக சிவபுராணம் விளக்குகிறது.

சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்வார்கள். குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்வோமா என்ன? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து என்று மருத்துவர் சொல்லுவாரா? நோய் உள்ளவனுக்குத்தான் மருந்து தேவை. நோய் இல்லாதவருக்கு மருந்து தேவையில்லை.

அதுபோல வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், சிரமங்களில் தவிப்பவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள், எதற்குத்தான் இப்படியொரு ஜென்மம் எடுத்தோமோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், மனநிலை பாதித்தவர்கள் என அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். 

இந்தக் கஷ்டங்களும் கவலைகளும் பிறவிப்பிணி. நம்முடைய இந்தப் பிறவியால் உண்டான நோய். இவற்றைப் போக்குகிற வல்லமை, ருத்ராட்சத்துக்கு உண்டு. ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்திருந்தால்தான், அவர்களுக்கு ருத்ராட்சத்தை அணிந்துகொள்கிற பாக்கியமே கிடைக்கும் என்றும் அதேபோல் மூன்று தலைமுறையாக பாவத்தைச் சுமந்தவர்கள், ருத்ராட்சத்தை அணிந்துகொண்டால், சிவமந்திரங்களைச் சொல்லி வந்தால், பாவத்தில் இருந்தும் சாபங்களில் இருந்தும் விடுபடலாம் என்றும் தெரிவிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow