மதுரை சித்திரை திருவிழா.. வைகையில் இறங்கும் கள்ளழகர்.. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்த கதை

மதுரை: கள்ளழகர் வைகையில் இறங்குவதே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காகத்தான். யார் இந்த மண்டூக மகரிஷி. அவர் யாரிடம் எதற்காக சாபம் பெற்றார். கள்ளழகர் எப்படி சாப விமோசனம் கொடுத்தார் என்று பார்க்கலாம்.

Apr 22, 2024 - 15:24
மதுரை சித்திரை திருவிழா.. வைகையில் இறங்கும் கள்ளழகர்.. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்த கதை

எந்த ஒரு விழாவும் காரண காரியம் இன்றி நடைபெறாது. மதுரை சித்திரை திருவிழாவும் அப்படித்தான்க. ஒவ்வொரு வருஷமும் கள்ளழகர் வைகையில இறங்குவதை பார்க்க பல லட்சம் பேர் மதுரையில் கூடுவார்கள்.  அழகர் மலையில் அருள்பாலிக்கும் கள்ளழகரும் சித்திரை திருவிழாவும் புராண நிகழ்வுகளோடு தொடர்புடையது.

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் அழகர் கோவில் 102வது திவ்ய தேசமாகும். அழகர் மலையில் நூபுரகங்கை தீர்த்தம் இருக்கிறது இது கங்கையை போல புனிதமான தீர்த்தம். அந்த தீர்த்தம் அழகர் மலையில் உருவானதும் புராண நிகழ்வுதான்.

சித்திரை திருவிழா: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் மூன்றடி மண்ணைத் தர சம்மதித்தவுடன், திருவிக்ரமனாக, உலகளந்த பெருமாளாக மகாவிஷ்ணு அவதரித்து பதினான்கு உலகங்களையும் அளந்தார். அவ்வாறு பிரம்மலோகத்தை அளக்கும்போது, பிரம்மா உலகளந்த பெருமாளுக்கு பாதபூஜை செய்தார். நீரால் திருமாலின் திருப்பாதங்களை அபிஷேகம் செய்ய, பெருமாள் அணிந்திருந்த நூபுரம் என்கிற சிலம்பிலிருந்து சில நீர்த்துளிகள் பூமியில் விழுந்து பெருக்கெடுத்து ஓடியது. அதுதான் அழகர்மலையில் உள்ள நூபுர கங்கை. கங்கையிலும் புனிதமானது நூபுர கங்கை என ஆழ்வார்களால் பாடப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகருக்கு நடத்தப்படும் விழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது; மதுரையின் பாரம்பரியத் திருவிழாவாகவும் போற்றப்படுகிறது.

மண்டூக முனிவர்: முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, ‘மண்டூக பவ’ என்று சாபமிட்டு விடுகிறார். ஒரு தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். மேலும், அழகர் வரும் பாதையையும் மாற்றி, அதுவரை கள்ளர் இன மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பாதையை மக்களும் பயன்படுத்தும்படி ஏற்பாடு செய்தார். அதுதான் தற்போதுள்ள அழகர் கோயில் சாலை.

சித்திரை மாதத்தில் சுந்தரராஜ பெருமாள் கள்ளர் அலங்காரத்தில் மதுரைக்கு கிளம்புவார். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் ஆக மாறியது.  கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார். மதுரைக்கு கள்ளழகர் வரும் போது கூடவே அழகர் வேடம் போட்டு கையில் தீவட்டி பிடித்தும் சிலர் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டும் ஆடிப்பாடி வருவதை பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். 

மலையை விட்டு இறங்கி வரும் போது கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி வரும் கள்ளழகரை காண கூட்டம் அலைமோதும். வழியெங்கும் மண்டகப்படி அமைத்திருப்பார்கள். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக
அதிகாலையில் மதுரைக்குள் இன்று நுழைந்தார் கள்ளழகர். மூன்று மாவடியில் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு அழைத்தனர்.

வழியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எதிர்கொண்டு அழைக்க எல்லோருக்கும் தரிசனம் கொடுத்து விட்டு தல்லாகுளம் அம்பலகாரர் மண்டபத்திலும் எதிர்சேவையை ஏற்றுக்கொண்டு பெருமாள் கோவிலில் தங்கி ஓய்வெடுக்கிறார் கள்ளழகர்.  

மதுரைக்கு வரும் அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள். கள்ளழகர் ஒய்யாளியின் போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். திருமஞ்சனத்திற்குப் பிறகு, தங்கக் குதிரை வாகனத்தில் பெருமாளுக்கு அலங்காரம் நடைபெறும். அதற்கு முத்தாய்ப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை பெருமாளின் தோளுக்கு சாற்றப்படும்.

ஐந்தாம் நாளான சித்ரா பௌர்ணமியான நாளைய தினம் (ஏப்ரல் 23) அன்று காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் வெள்ளைப் பட்டாடை உடுத்தி, தோளில் பச்சைநிற பட்டாடை போர்த்திக் கொண்டு, வைகை நதியில் இறங்குவார். எதிர்கொண்டு அழைக்கும் வீரராகவப் பெருமாளுடன் மாலை மாற்றிக் கொள்வார். அழகர் ஆற்றில் இறங்கியவுடன், பக்தர்கள் அனுமன், கள்ளழகர் உட்பட பல்வேறு வேடங்கள் பூண்டும், தண்ணீர் பீய்ச்சியும் தீப்பந்தம் ஏந்தியும் முடி இறக்கிக் கொண்டும் பலவாறாக தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். 

அழகர் ஆற்றில் இறங்கும் சமயம் பக்தர்கள் பலர் செம்பு நிறைய சர்க்கரை நிரப்பி அதில் சூடம் கொளுத்தி தீபாராதனை காண்பித்து மற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். அழகர் ஆற்றில் இறங்கும்போது ஆற்றில் ஆங்காங்கே குடும்பம், குடும்பமாக குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவதை பார்க்கலாம். வைகையில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிக்க அழகர் மலையில் இருந்து வந்திருக்கும் கள்ளழகரை தரிசிப்பதால் அந்த ஆண்டு வளமாக அமையும் என்பது மக்களின் நம்பிக்கை. 

தமிழகத்தில் அதிகளவில் மக்கள் பங்கேற்கும் விழா கள்ளழகர் சித்திரைத் திருவிழா என்றால் அது மிகையாகாது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்தைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அங்கு பக்தர்கள் அங்கப் பிரதட்சண நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். அன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

ஆறாவது நாளான ஏப்ரல் 24 அன்று விடியற்காலை பெருமாளுக்கு சைத்யோபசாரம் (சந்தனக் காப்பு) நடைபெறும். சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டளையாக இது நிறைவேற்றப்படும். அதன் பின்னர், பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வருகிறார். அன்று பகல் 1 மணி அளவில் தங்கக் கருட வாகனத்தில் அலங்கார பூஷிதராக, சுதபஸ் மகரிஷிக்கு (மண்டூக முனிவர்) சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது சுதபஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். 

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். அதன் பின்னர், கருட வாகனத்தில் வண்டியூர் அனுமார் கோயிலுக்குச் சென்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்பார், பெருமாள். இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏப்ரல் 25ஆம் தேதியன்று ஏழாம் நாள் காலை மோகினி அவதாரத்தில் அருள்பாலிப்பார். அதன் பின்னர், பகல் 1 மணி அளவில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் அங்கிருந்து புறப்பட்டு, இரவு தல்லாகுளம் சேதுபதி ராஜா மண்டபம் வந்து சேர்வார். ஏப்ரல் 26ஆம் தேதி எட்டாம் நாள் விடியற்காலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பாடாகி, அழகர் மலையை வந்தடைவார் கள்ளழகர். அழகர் மலையில் இருந்து புறப்பட்டு, மதுரைக்கு வருவதில் இருந்து மீண்டும் மலைக்குச் செல்லும் வரை மதுரையே விழாக்கோலம் கொண்டிருக்கும். மக்கள் வெள்ளத்தில் அழகர் வந்து செல்வதை தரிசிப்பதை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

PC: Prince Prabakaran

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow