மாணவனைத் தாக்கிய தலைமையாசிரியரைக் கண்டித்து அரசு பள்ளி முற்றுகை
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை மர ஸ்கேல் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதாகக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை பள்ளித் தலைமை ஆசிரியர் லெஸ்லின் என்பவர் மர ஸ்கேல் கொண்டு தாக்கியதாகக் கூறி மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர். இதற்குப் பள்ளி தலைமையாசிரியர் லெஸ்ஸின் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார். இதனையறிந்த அப்பகுதியைச் சார்ந்த மேலும் சில பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பள்ளியை முற்றுகையிட்டுள்ள தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்பேச்சுவார்த்தையின் போது மாணவ மாணவிகள் செய்யும் சிறு தவறுகளுக்காக அவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் மர ஸ்கேல் கொண்டு அடிப்பது, காலால் எட்டி உதைப்பது என மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாகத் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்துக் கேட்க வரும் பெற்றோர்களை ஒருமையில் பேசுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு குலசை முத்தாரம்மனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட மாணவ மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியரும் அப்பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் அவரது மனைவியும் இணைந்து அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து பெற்றோர்களின் புகார் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன்படி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை மீது துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரக் கல்வி அலுவலர் கூறியதை அடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
What's Your Reaction?