ஆளுநரிடம் திமுக அரசு அடிமையிலும் அடிமையாக இருக்கிறது - செல்லூர் ராஜு 

திமுக ஆட்சியைக் காட்டிலும் அதிமுக ஆட்சி நன்றாக இருந்தது என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆளுநரிடம் திமுக அரசு அடிமையிலும் அடிமையாக இருக்கிறது என்றும் அதிமுகவைச் சேர்ந்த செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். 

Oct 17, 2024 - 17:21
ஆளுநரிடம் திமுக அரசு அடிமையிலும் அடிமையாக இருக்கிறது - செல்லூர் ராஜு 
sellur raju

அதிமுக ஆண்டுவிழாவை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

“2026ல் ஸ்டாலின் வீட்டுக்குப் போவார் எடப்பாடி கோட்டைக்குப் போவார். எடப்பாடி பழனிச்சாமி பெரிய மக்கள் செல்வாக்குடன் ஆட்சியமைப்பார்" என்று தெரிவித்த அவரிடம் சென்னை மழை பாதிப்பை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடவில்லை என்ற அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து குறித்துக் கேட்டதற்கு... "மழை பாதிப்புகளை சீரமைக்கப் பணியாற்ற வேண்டி கட்சியினருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் ஊது குழலாக சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். 3 மணி நேர மழையையே சென்னை தாங்கவில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட நிற்காது என்றார்கள். ஆனால் சாலைகள் எல்லாம் வெள்ளமானது. யாருடைய புண்ணியமோ தெரியவில்லை அந்தப் புயல் கடந்து சென்று விட்டது. 

தகுதியற்றவர்கள்தான் பிறரைத் தகுதியற்றவர் என விமர்சிப்பார்கள். உண்மையில் யார் தகுதியற்றவர் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு எடப்பாடி ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்று மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் செய்த அளவுக்கு திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்யவில்லை.

நேற்று வரை ஆளுநரும் திமுக அரசும் எலியும் பூனையுமாக இருந்தார்கள். இன்று இருவரும் ஒன்றாகியுள்ள அதிசயம் நடந்துள்ளது. இன்றைய ஆளுநர் திமுகவினரால் சட்டமன்றத்தில் கேலி செய்து வெளியே அனுப்பபப்பட்டார். எந்த ஆளுநருக்கும் இது போல் ஒரு இழிநிலை வந்ததில்லை. கூட்டணிக் கட்சிகளை ஸ்டாலின் நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களை அடிமை அரசு என்று ஸ்டாலின் சொன்னார். இன்று திமுக அரசுதான் ஆளுநருக்கு அடிமையிலும் அடிமையாக இருக்கிறது” என்று கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow