கத்தி பேசும் விஜய் சேதுபதி.. கண்ணால் பேசும் நித்யா மேனன்- தலைவன் தலைவி திரை விமர்சனம்!

கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகிய தலைவன் தலைவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், படம் தொடர்பான குமுதம் விமர்சனம் காண்க.

கத்தி பேசும் விஜய் சேதுபதி.. கண்ணால் பேசும் நித்யா மேனன்- தலைவன் தலைவி திரை விமர்சனம்!
thalaivan thalaivi movie kumudam review

சாதாரண ஒரு ஃபேமிலி டிராமாவை, 'சிங்கம்', ‘விக்ரம்’, 'ஜெயிலர்' ரேஞ்சுக்கு மாஸ் ஹீரோ கேங்ஸ்டர் படம் மாதிரி, ச்சும்மா விர்ர்ர்ர்...ருன்னு எடுத்து, ஆக்ஷன் சீக்வன்ஸ்க்கு மத்தியில் இன்ட்ரவல் பிளாக் வெச்சு மிரட்டவும் முடியுமா? மிரட்டியிருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ்.

குலதெய்வ கோயிலுக்கு யோகி பாபுவைத் தொடர்ந்து காளி வெங்கட் குடும்பம், நித்யாமேனன் குடும்பம், விஜய் சேதுபதி குடும்பம்னு ஒவ்வொண்ணா வர ஆரம்பிக்குது. அதுவரைக்கும் ஃபிளாட்பாரத்துல என்ட்ரி ஆகும் பாசஞ்சர் ட்ரெயின் மாதிரி மெல்ல நகரும் காட்சிகள், விஜய் சேதுபதி என்ட்ரி ஆனதும் வேற லெவலுக்கு மாறிவிடுகின்றன.

பாதி மொட்டையடிச்ச தன் குழந்தையை நித்யாமேனன்கிட்ட இருந்து புடுங்குன விஜய் சேதுபதி, மொட்டை அடிக்க வந்தவனை செவுட்ல அறைய, திரைக்கதையில் அப்ப எடுக்குற வேகம், எண்ட் கார்டு போடற வரைக்கும் எக்ஸ்பிரஸ்தான்.

பொண்ணு பார்க்க வந்த இடத்துல, நித்யாமேனனை தன் பரோட்டா புராணத்தால் விஜய் சேதுபதி மயங்க வைக்க, கல்யாணம் நடக்கப்போற நேரத்துல, நித்யா மேனன் பிரதர் ஆர்.கே.சுரேஷ் அதுல கட்டயப் போட, அதுக்கப் புறம் ஒவ்வொரு ஸீனுமே ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்தான்.

கத்தி பேசும் பரோட்டா மாஸ்டர் விஜய் சேதுபதி, கண்ணால் பேசும் மனைவி நித்யா மேனன், நக்கலடிக்கும் திருடன் யோகிபாபு, பாசத்தால் மகனை உசுப்பேத்தும் தீபா சங்கர், சின்சியர் ஃபேமிலி மேன் காளி வெங்கட், ஆடி முடித்த அப்பா சரவணன், கோவக்கார மச்சான் ஆர்.கே. சுரேஷ், மாமனார் செம்பன், தங்கச்சி ரோஷினி, மற்றும் மைனா நந்தினின்னு ஒவ்வொரு கேரக்டரும் சுவாமிமலை சிற்பம்தான்.

விசுக் விசுக்கென கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப்போகும் நித்யாமேனனை நடுரோட்டில், பஸ்ஸில், மாமனார் வீட்டில்... என நூறு தடவை சமாதானப்படுத்தும் விஜய் சேதுபதியின் நடிப்பு ஒவ்வொரு முறையும் வேற லெவல். மனைவிக்கு பஸ்ஸில் டிக்கெட் வாங்க மாமனார் ஊர் பேரே தெரியாமல் அவர் முழிக்குமிடம், நல்ல பல்பு.

படிக்காத கணவனுடன் பல விஷயங்கள் ஒத்துப்போகா விட்டாலும், அவனை விட்டுக் கொடுக்க முடியாமல் நித்யாமேனன் படும் அவஸ்தையிலும் ஓர் அழகு. விஜய் சேதுபதி கன்னத்தில் அப்பப்ப பொளேர்னு அவர் அறைவது சுளீர். ஓட்டலில் கல்லாவில் உட்கார்ந்த தன்னை மாமியாரும், நாத்தனாரும் எச்சி இலை எடுக்க வைத்தபோது காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் அவருக்கு மட்டுமே வரும்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல். ஒளிப்பதிவு ஓபனிங்கில் சுமாராக இருந்தாலும், போகப்போக பளிச். இவர்கள் எல்லாரையும் மிஞ்சியது எடிட்டர் பிரதீப் ஈ ராகவ். கட்டிங் ஷார்ப்னா, கதையை வெட்டி ஒட்டி, விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கும் விதம் பிரமாதம்.

மச்சான்னு புருஷன்-பொண்டாட்டி, அம்மா அப்பா, அண்ணன் - தம்பி, அக்கா தங்கச்சி, மாமன் உறவுகள் ஒவ்வொண்ணும் குடும்பத்துக்குள் குழப்பத்தை உருவாக்க, சிக்குனவன் செக்குல புண்ணாக்குன்னு ஸீன் பை ஸீன் சொன்ன இயக்குநர் பாண்டிராஜ், கிளைமேக்ஸ்ல குடும்பம் என்கிற அமைப்பில் ஆயிரம் குறை இருந்தாலும், சேர்ந்து வாழணும்னு நினைக்கிறவங்களுக்கு அது தாங்கிப்பிடிக்கிற தூண் மட்டுமல்ல; ஆறுதலோடு, அன்பையும் தருகிற தாயின் மடி! என்பதைத் தத்துவமாக இல்லாமல் தடாலடியாக உணர்வுபூர்வமாக சொல்லியிருப்பது சூப்பர்.

கிளைமேக்ஸில் தேவை இல்லாத கூட்டங்களைக் குறைத்திருக்கலாம். கோர்ட்டில் கணவன்-மனைவி இருவருக்கும் டைவர்ஸ் ஆனது போல் படம் முடிந்த பின் உருட்டுவதெல்லாம் தேவையா?

தலைவன் தலைவி - விபூதி, குங்குமம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow