விஜய்யிடம் இருப்பது விசிலடிக்கும் கூட்டம்.. சீமானுக்கு வயிற்றுப் பிழைப்பே நோக்கம்- ராஜீவ் காந்தி பேட்டி

”விஜய்யிடம் இருப்பது விசில் அடிக்கும், கைதட்டும் கூட்டம்தான். அந்தக் கூட்டத்துக்கு வாக்களிக்கும் வயது இருக்குமா என தெரியவில்லை. இருந்தாலும் அது உதிரியாக இருந்த வாக்குகள் தான்” என திமுகவினை சேர்ந்த ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

விஜய்யிடம் இருப்பது விசிலடிக்கும் கூட்டம்.. சீமானுக்கு வயிற்றுப் பிழைப்பே நோக்கம்- ராஜீவ் காந்தி பேட்டி
DMK's Rajiv Gandhi: Seeman's Criticisms are Just a Stunt for Survival

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி வலுவான கூட்டணி, மாநாடு, சுற்றுப்பயணம் என தீயாக வேலையை தொடங்கியிருக்கும் எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி தி.மு.க மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசுகின்றன. மறுபுறம் கூட்டணிக் கட்சிகளும் குடைச்சல் கொடுக்க, 'உங்களுடன் ஸ்டாலின்', புதிய உறுப்பினர் சேர்க்கை என பதிலுக்கு ஏதோ சமாளித்து வருகிறது தி.மு.க. இதற்கிடையே பிரதமர் விசிட், நிதி ஒதுக்கீடு விவகாரம் தமிழக அரசியலில் அனலைக் கூட்ட இதுகுறித்த கேள்விகளை தி.மு.க மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தியிடம் முன்வைத்தோம்.

தமிழ்நாடு வந்த பிரதமர், 'தமிழகத்துக்கு நிதி கொடுக்கிறோம்' என்கிறார். மறுபுறம் ’கல்விக்கான நிதியையே தரவில்லை' எனக்கூறி அன்பில் மகேஷ் மத்திய அமைச்சரை சந்திக்கிறார். இதில் எது உண்மை?

"தமிழகம் கட்டிய வரிப்பணத்திலிருந்து தமிழகத்துக்கு சேரவேண்டிய பணத்தை கொடுங்கள் என்கிறோம். ஆனால், பிரதமரோ காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு, அதைவிட அதிகமாக தமிழகத்துக்கு நிதி கொடுத்திருக்கிறோம் என்கிறார். அதுவே முழு பூசணியை சோற்றில் மறைக்கும் செயல். காங்கிரஸ் ஆண்டபோது 54 லட்சம் கோடிதான் இந்தியாவின் கடன். ஆனால் இன்று 1.75 லட்சம் கோடி கடன்.

அன்று தங்கம் ஒரு பவுன் 12,000 ரூபாய். இன்று 72,000 ரூபாய். இப்படி பணத்தின் மதிப்பு கூடியிருக்கும்போது. காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்ததைவிட அதிகமாக கொடுத்திருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய மோசடி”

’ஒரு பெரிய கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும்' என்கிறாரே இபி.எஸ், அது எந்தக் கட்சி?

"அவரை நம்பி யார் போவார்கள்? அந்தக் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற தகவல் அவருக்கே தெரியாது. 'பா.ஜ.கவும் அதிமுகவும் கூட்டணி ஆனால் பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி என்கிறார். இது உலகத்திலேயே புது உருட்டு. நாதக என அவர் பல கட்சியின் வாசல் கதவை தட்டினார். அவர்கள், 'முடியாது' என கதவை அடைத்துவிட்டனர். அடுத்து எந்தக் கட்சியின் கதவை தட்டப்போகிறார் தெரியவில்லை"

பெரியார் விமர்சனம், கள் இறக்குவது, ஆடு, மாடுகள் மற்றும் மரங்கள் மாநாடு என ரூட்டை மாற்றி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறாரே சீமான்?

"சீமான், பெரியாரை விமர்சனம் செய்யவில்லை. மாறாக அவதூறு அரசியல் செய்கிறார். அது மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. அவரின் தொண்டர்களும் கரைந்துபோகிறார்கள். அதனால் ஆடு, மாடுகளிடம் பேசுகிறேன் என்பவர், நாளை ஆமையிடம்கூட பேசுவார். அவர் முடிவு செய்துவிட்டார். தனக்கு வாக்களிப்பது மாட்டு மந்தைகள்தான் என்று. அதேபோல வரலாற்று கதைகளையும் புனைவுகளையும் வைத்து தனக்கான கற்பனையோடு சொல்லும் ஒரு சிறந்த கதைசொல்லி சீமான்.

அப்படித்தான், காமராசரை புகழ்ந்து பேசினால் நாடார் சமூகத்தினர் தனக்கு வாக்களித்து விடுவார்கள் என்று நினைத்து இல்லாத தகவல்களை பொய்யாக பேசிவருகிறார். அவரது உள்நோக்கம் வயிற்றுப்பிழைப்பு மட்டுமே!

ஆனால், முதலமைச்சர் சீமான் சந்திப்பு சர்ச்சையாகி இருக்கிறதே. தி.மு.க. நாதக ஓரணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா?

"அரசியல் கடந்து சீமான் முதல்வரை சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமானது தான். எவ்வளவுதான் அவர் அவதூறு பேசினாலும் துக்கம் விசாரிக்க வந்தவரை வீட்டில் வைத்து பேசவேண்டும் என்ற மனித மாண்பை எங்கள் தலைவர் காப்பாற்றியிருக்கிறார். திமுக பக்கம் இருப்பது மக்கள். சீமான் பக்கம் இருப்பது மாடுகள். மக்களும் மாடுகளும் ஒருபோதும் அரசியல் கணத்தில் சந்தித்துக்கொள்ள முடியாது.

’டாஸ்மாக்கில் ஊழல்' என்று திமு.க அரசுக்கு எதிராக அதிரடி ரெய்டுகள் நடந்தன. இப்போது எல்லாம் அமைதியாகிவிட்டது. பாஜக திமுக இடையே திரைமறைவு புரிதல் இருக்கிறதா?

"தி.மு.க.வை கொள்கை ரீதியாக வெல்ல முடியாமல் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகள் மூலம் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை தொடர்ச்சியாக பழிவாங்குவது, அவதூறு பரப்புவது. பா.ஜ.க.வின் சித்து வேலையாக இருந்தது. அதற்கு நீதிமன்றம் குட்டு வைத்ததால் பயந்துபோய் அமைதியாக இருக்கிறார்கள். இதை வைத்து பாஜக திமுக கூட்டு என்பது அபத்தமானது. இந்தியாவிலேயே ஆர்.எஸ்.எஸ். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கிற பிரதான கட்சியாக இருப்பது திமுகதான். தினந்தோறும் களத்தில் சண்டை போடுகிறோம். விஜய் போன்ற அறிவிலிகள் பேசும் பேச்சு அது"

2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு விஜய் நெருக்கடி தருவார் என நினைக்கிறீர்களா?

"நாங்கள் அப்படி பார்க்கவில்லை. விஜய்யிடம் இருப்பது விசில் அடிக்கும், கைதட்டும் கூட்டம்தான். அந்தக் கூட்டத்துக்கு வாக்களிக்கும் வயது இருக்குமா என தெரியவில்லை. இருந்தாலும் அது உதிரியாக இருந்த வாக்குகள் தான். சீமான் கட்சியைதான் அது பாதிக்கும். ஒருபோதும் திமுக வெற்றியை பாதிக்காது. விஜய்க்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம், 50 வயதுக்கு மேல் தான் அவருக்கு ஞானோதயம் வந்ததா? அரசியலில் இருக்க வேண்டாம். இதற்கு முன்பு அரசியல் கருத்தாவது தெரிவித்து இருக்கிறாரா? அவரை திரையில் பார்த்து கைதட்டிய கூட்டம் தரையில் பார்த்ததும் புளகாங்கிதம் அடைகிறது. இன்னும் சில நாட்களில் ‘ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்’ என ரசிகர்களே சொல்வார்கள்"

ராமதாஸ், அன்புமணி தனித்தனி கட்சி என்று சென்றால், அதில் எந்த அவணி திமுகவோடு வரும்?

அதெல்லாம் எங்கள் தலைவர் முடிவு செய்ய வேண்டியது. அதுகுறித்த கருத்து எங்களுக்கு இல்லை. ஆனால் பாஜகவுடன் சேர்ந்தால் யாரும் உருப்பட முடியாது என்பதற்கு பாமகவில் நடப்பதுதான் சாட்சி.”

(கட்டுரையாளர்- அ.கண்ணதாசன் / குமுதம் ரிப்போர்ட்டர் / 05.08.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow