எதிரிகள் ஜாக்கிரதை-மாலைமதி
அம்மாவை அன்புடன் கவனிக்கும் சிங்கம், தனது மனமாற்றத்திற்குப் பூங்கொடியே காரணம் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறான். ஆனால், பூங்கொடி மாணிக்கத்துடன் பைக்கில் புறப்படுவதைப் பார்த்ததும் சிங்கத்தின் முகம் மாறுகிறது.
டிஸ்சார்ஜ் ஆகி, அன்று மதியம் 1 மணிக்கு வீடு திரும்பிவிட்டார்கள். சிங்கம்தான் பொறுப்பெடுத்து, கார் ஏற்பாடு செய்து, அம்மாவை அழைத்து வந்தான். புறப்படும்போதே அம்மாவின் உடல் நிலைக்காக அவனை எச்சரித்து அனுப்பினாள் பூங்கொடி. "நாங்க பத்திரமா பாத்துக்கறோம், பூங்கொடி. அம்மாவை எப்ப ரெவ்யூவுக்குக் கூட்டிட்டு வரணும்?"
"மருந்துகளைச் சாப்டுட்டு நல்ல ஓய்வுல இருந்தா, ஒரு வாரம் கழிச்சு வந்தா போதும்!"
"அதுவரைக்கும் உன்னைப் பார்க்காம இருக்கணுமா, பூங்கொடி? உன் கூடவே இருந்து, நீ தாங்கிப் புடிச்சுப் பழகிப்போச்சு! அதனால உன்னைப் பார்க்காம இருக்க முடியாது பூங்கொடி!" "நான் எப்படியாவது நடுவுல ஒரு மணி நேரமாவது வந்துட்டுப் போறேன்மா!" "என்னிக்கு வர்றீங்கனு சொல்லுங்க, பூங்கொடி? நான் பைக்ல வந்து உங்களைக் கூட்டிட்டு வந்து, கொண்டு போய் விடறேன்!" சிங்கம் சொல்ல, "சொல்றேன் சார்!" என்றாள். வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். "வள்ளி, ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா! அம்மா பிழைச்சு வந்திருக்காங்க!"
வள்ளியும் அவள் கணவனும் ஆச்சர்யப்பட்டார்கள். இதுவே ரெண்டு வருஷம் முன்பு இதே மாதிரி அம்மா ஒரு முறை அட்மிட் ஆகி, வீடு திரும்ப, வள்ளி ஆரத்தி எடுத்து வர, "எதுக்கு ஆரத்தி? அம்மா என்ன புதுசா கல்யாணம் செஞ்சுக்கிட்டா வர்றாங்க? இதெல்லாம் அசிங்கமால்லே?" மாணிக்கம் ஆவேசமாக, அம்மா கண்கள் கலங்க உள்ளே போக, வள்ளி சமாதானப்படுத்தினாள். "விடும்மா! அவன் நாக்குல முள்ளை வெச்சுக் குத்திக்கிழிக்கறது நமக்குப் புதுசா என்ன?" "அதே சிங்கம் இன்று தலைகீழாக மாறி, ஆரத்தி எடுக்கச் சொல்கிறான். இந்த அளவுக்கு ஒரு மனிதனால் மாற முடியுமா?" வீட்டுக்குள் வந்தது முதல், அம்மாவைப் படுக்க வைத்து, அவனே கவனித்து கொண்டான். "எனக்கு இப்ப எந்தப் பிரச்னையும் இல்லடா. நான் தெம்பாத்தான் இருக்கேன். என்னால பழையபடி இயங்க முடியும்!"
"அவசியமே இல்லை. பூங்கொடி என்னைக் கொன்னே போடுவா! நான் பாத்துக்கறேன். மாப்பிள்ளை, வள்ளியை இன்னும் ரெண்டு நாள் அனுமதிப்பீங்களா? நான் அவகிட்ட மெஸ் வேலைகளைக் கத்துக்கிட்டு, நானும் தம்பியுமா மெஸ்ஸை நடத்திக்கறோம். நான் ஒரு மாசம் லீவு போட்டாச்சு!" வள்ளிக்குப் பேச நாக்கு எழும்பவில்லை. இதெல்லாம் நிஜம்தானா எனப் பலமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். அவள் கணவன் புறப்பட்டுப் போக, அம்மாவைச் சாப்பிட வைத்து, மருந்து தந்து, வள்ளியுடன் மெஸ் புகுந்து வேலைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். மாலை 6 மணிக்கு ஊரிலிருந்து மாணிக்கம் திரும்பிவிட்டான்.
"வாடா தம்பி, ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டியாச்சு. இந்தா ரசீது! மருந்துகளை நான் பார்த்துக் கொடுக்கறேன். நீயும் முடிஞ்சா ரெண்டு நாள் லீவு போடு! உனக்கு நல்லா சமைக்க வரும். நான் மெஸ்ல மத்த வேலைகளையும், அம்மாவையும் பார்த்துக்கறேன்!" இப்படியெல்லாம் அவன் இணக்கமாகத் தம்பி, தங்கைகளிடம் ஒரு நாள்கூடப் பேசியதில்லை. மாணிக்கம் ஒரு மாதிரி மிரண்டான். சிங்கம், வள்ளியுடன் மெஸ்ஸில் இருக்கும் நேரம், அம்மாவிடம் வந்தான் மாணிக்கம். "என்னம்மா நடக்குது, எப்படி இவன்கிட்ட இப்படியொரு மாற்றம்? நம்பவே முடியலையேம்மா!" "அதை அவனே சொல்லிட்டான்பா! நீங்க யாரும் இன்னும் என்னை நம்பலை; ஆனா, புரிஞ்சுப்பீங்கன்னு அவனே சொல்லிட்டான். சரி, இது நிஜமா இருந்தா, நான் விடாம வணங்கற தெய்வத்தோட கருணைதான். அந்தக் கடவுள் கண் திறந்தாச்சுனு சந்தோஷப்படுவேன், தம்பி!"
அடுத்து வந்த இரண்டு நாட்களில் கொஞ்சம்கூடப் பாசாங்கு இல்லாத அவனது உழைப்பு, இவர்களைப் பெருமளவு ஆச்சர்யப்படுத்தியது. அம்மாவுக்காக உழைப்பது மட்டுமல்லாமல் தம்பி, தங்கையுடன் கலகலப்பாகப் பேசவும் செய்தான். இதுவரை அவர்கள் காணாத ஒரு பாசமான அண்ணனைக் காட்டினான். மாணிக்கம் ஐம்பதாயிரம் பணம் எடுத்து வந்து, அவனிடம் தந்தான். "எதுக்கு மாணிக்கம் இந்தப் பணம்?" "அம்மாவுக்காக ஆஸ்பத்திரிக்கு நீ செலவழிச்ச பணம்!" "என்னை அவமானப்படுத்தறியாடா தம்பி? அம்மாவுக்குச் செய்யற பொறுப்பும், கடமையும் எனக்கு மட்டும் இல்லையாடா? நான் செய்யக்கூடாதா? இத்தனை நாள், நான் தப்பானவனா இருந்தது நிஜம்தான். அதுக்காக என்னை நீ தண்டிக்கறியா? இந்தக் குடும்பத்துக்கும் உனக்கும் தொடர்பு இல்லைனு பிரிச்சு வைக்கப்போறியா?"
சிங்கம் அழுதேவிட்டது. குடும்பத்தாரை அழ வைத்துதான் சிங்கத்துக்குப் பழக்கம். சிங்கம் அழுது இவர்கள் யாரும் பார்த்ததில்லை. "நீ அழாதேப்பா, கஷ்டமா இருக்கு!" அம்மா சொல்ல, "அண்ணே, உன்னை அவமானப்படுத்தற எண்ணம் சத்தியமா எனக்கில்லை. உங்கிட்ட இத்தனை பெரிய தொகை எப்படி? நீ யார் கிட்டேயாவது கடன் வாங்கியிருந்தா, அதைத் திருப்பிக் கொடுக்கணுமேன்னுதான் சொன்னேன்!" "நண்பர் ஒருத்தர்கிட்ட வாங்கினேன். ஆபீஸ்ல லோன் போட்டிருக்கேன். அந்தப் பணம் இந்த வாரக் கடைசில வந்துடும். கடனை அடைச்சிடுவேன். அப்புறமா சம்பளத்துல பிடித்தம் போகும். உனக்கு என் பேச்சுல சந்தேகம் இருந்தா, எங்க ஆபீஸ்ல விசாரிக்கலாம்!" "ஐயோ, அதெல்லாம் வேண்டாம்!"
அம்மா நிஜமாகவே நெகிழ்ந்தாள். அடுத்து வந்த நாட்களில், அவனது உழைப்பும் செய்கைகளும் பிரமிக்கும்படியாகத்தான் இருந்தன. வள்ளியை அவனே கொண்டு போய் அவள் வீட்டில் விட்டான். பூங்கொடிக்கு தினசரி அம்மாவின் உடல் நிலை முன்னேற்றம் குறித்துத் தகவல் தந்தான். அவளுடன் அம்மாவை ஃபோனில் பேச வைத்தான். வெள்ளியன்று காலையில் பூங்கொடி வீட்டுக்கு வர, அவனே ஓடிப்போய் ஆரத்தி கரைத்து எடுத்து வந்தான். “என்ன இது, இதெல்லாம் வேண்டாம்!" "இல்லீங்க, எங்கம்மாவை மீட்டுத் தந்தது நீங்கதான். என் புத்தியில ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது நீங்கதான்!"
"நானா, நான் என்ன செஞ்சேன்?"
“ஒரு நர்ஸ், குடும்பத்துக்குச் சம்பந்தப்படாத, ரத்த பந்தமில்லாத பெண்ணான நீங்க எங்கம்மாவுக்கு ராப்பகலா கண் முழிச்சு சேவை செஞ்சப்ப, நான் பெத்த பிள்ளையா இருந்தும் இத்தனை நாள் வீட்டுக்கு பாரமா இருந்திருக்கேனேன்னு ஒரு ராத்திரி நொந்து நொறுங்கினேன். அசிங்கப்பட்டேன். அன்னிக்கு ஏற்பட்ட மாற்றம்தாங்க இது. குடும்பத்தோடு என்னை இணைய வச்ச உங்களை வரவேற்க, இந்த சின்ன ஆரத்திகூட இல்லைனா எப்படீங்க?"
அவனே ஆரத்தி எடுத்தான்.
"வலது காலை எடுத்து வச்சு வாங்க. நீங்க இந்த வீட்டுப் பொண்ணுனு அம்மா ஆஸ்பத்திரில சொல்லலை?" அம்மா நெகிழ்ந்துபோயிருந்தாள். சிங்கமே அவளுக்காகப் பாயசம் எடுத்து வரப்போனது. "என்ன பூங்கொடி இது, இத்தனை அதிர்ச்சிகளைத் தாங்கிக்கிற சக்தி எனக்கே இல்லைங்க!" மாணிக்கம் சொல்ல, "அவரோட இந்த மாற்றத்துக்குக் காரணம் நான்னா, எனக்குச் சந்தோஷம்தான்! நல்லது. மருந்துகளைவிட அவரோட மன மாற்றம் அம்மாவுக்கு இன்னும் தெம்பு தரும். நடக்கட்டும்! அவரை யாரும் இனி சந்தேகப்பட வேண்டாம். ஒரு மனுஷன் நிஜம்மா திருந்தினா, அப்புறம் பழசை யாரும் பேசக்கூடாது. அது நியாயம் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை!"
கலகலப்பாக அரை மணி நேரம் பூங்கொடி பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டாள். "நான் உங்களை ட்ராப் பண்றேன், பூங்கொடி!" என்றான் மாணிக்கம்.
"வேண்டாம் சார், நான் ஆட்டோ புடிச்சு போயிர்றேன்!" "எதுக்கு, நான் யூனியன் ஆபீஸ் போறேன். உங்களை ஆஸ்பத்திரில இறக்கி விட்டுட்டுப் போறேன், பூங்கொடி!"
மாணிக்கம் சொல்ல, பூங்கொடி உடனே சம்மதித்தாள். அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, பூங்கொடி ஏறி உட்கார, சிங்கத்தின் முகம் மாறியது. அதைப் பூங்கொடி மட்டும் கவனித்தாள்.
What's Your Reaction?