தடைக்காலம் பறக்கும் மீனுக்கு இல்லையோ! கோடைக்கு ஏற்ற கோலாமீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இரண்டு மாதங்கள் மட்டுமே கிடைக்கும் புரதசத்து மிகுந்த கோலா மீன்கள், உண்பதற்கும் சுவையானது

Apr 24, 2024 - 13:02
தடைக்காலம் பறக்கும் மீனுக்கு இல்லையோ! கோடைக்கு ஏற்ற கோலாமீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

தமிழகம் முழுவதும் மீன் பிடித்தடைக் காலம் அமலில் உள்ள நிலையில் பெரிய அளவிலான மீன் வரத்து கிடையாது.. ஆனால்  மீன் பிரியர்களுக்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது பறவை மீன் என்றழைக்கப்படும் கோலா மீன்களின் சீசன். இந்த மீன்கள்  உண்பதற்கு மட்டுமல்ல அதன் வரலாறு, மீன்பிடி முறை என அனைத்துமே சுவையானது தான்.

நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே ஆழ்கடல் பகுதியில், வைகாசி மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை 2மாத காலம் கோலா மீன் சீசன் தான். இந்த மீன்களுக்கான தனித்துவமே இதன் பறக்கும் தன்மையாகும். பல்லாயிரகணக்கான மீன்கள் ஒரே நேரத்தில் பறந்து வந்து படகையே கவிழ்த்து விட கூடியவை. இதனால் பலர் இதனை பறக்கும் மீன்கள் என்றும் அழைப்பதுண்டு..
 
நவீன இயந்திர மீன் பிடி காலத்தை விட, பண்டைய மீன்பிடி முறை என்பது வித்தியாசமானதாகும். பொதுவாக வைகாசி மாதம் ஐம்பெரும் சக்தி பீடங்களில் ஒன்றான நீலாயதாட்சி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில் தேரை வடம்பிடித்து விட்டே மீனவர்கள் கடலுக்குசெல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் முன் மீனவர்கள் வாய்க்கரசி போட்டுவிட்டே செல்வார்களாம். காரணம் கோலா மீன்களை பிடிப்பது பண்டைய காலத்தில் ஆபத்தான தொழிலாக கருதப்பட்டது. 

அதிகாலை இரண்டு மணிக்கே கட்டுமரத்தில் செல்லும் மீனவர்கள் காளாஞ்சி உள்ளிட்ட பூண்டு செடிகளை மலை போல் குவித்து கயிற்றில் கட்டி கடலில் பரப்பி காத்திருப்பார்கள். அப்போது கூட்டம் கூட்டமாக வரும் கோலா மீன்கள் வாசனையால் ஈர்கப்பட்டு, அந்த வலைகளில் வந்து  ஒளிந்து கொள்ளும். அப்போது மீனவர்கள் கோலாமீன்களை கொத்தாக அள்ளி பிடித்து கரைக்கு திரும்புவார்கள்.

கால மாற்றத்தில் தற்பொது பைபர் படகுகளில் செல்லும் மீனவர்கள், கோலா மீன்களை பிடிப்பதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட தங்கூஸ் வலைகளை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் 10-ஆயிரத்திலிருந்து 15-ஆயிரத்திற்கும் அதிகமான கோலாமீன்களை  எளிதாக பிடித்து கரைதிரும்புகின்றனர். மற்ற வகை மீன்கள் அனைத்தும் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படும் நிலையில், கோலாமீன்கள் மட்டும் எண்ணிக்கை அளவிலேயே விற்பனை செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். தற்பொது மீன் வரத்தை பொறுத்து 100 ருபாய்க்கு 8ல் இருந்து 10 மீன்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

இரண்டு மாதங்கள் மட்டுமே கிடைக்கும் புரதசத்து மிகுந்த கோலா மீன்கள், உண்பதற்கும் சுவையானது என்பதால் வெளியூரிலிருந்து வந்தும் இதனை வாங்கி செல்கின்றனர். நடப்பாண்டு கோலா மீன் சீசன் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow