அட்சய திருதியை.. 24000 கிலோ தங்கத்தை அள்ளிய பெண்கள்.. இன்று என்ன விலை தெரியுமா?

அட்சய திருதியை தினத்தன்று ஒரேநாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்த நிலையிலும் 24000 கிலோ தங்கம் விற்பனையானது. ரூ.14000 கோடிக்கு தங்கம் விற்பனையானது இது கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகமாகும்.

May 11, 2024 - 10:48
அட்சய திருதியை.. 24000 கிலோ தங்கத்தை அள்ளிய பெண்கள்.. இன்று என்ன விலை தெரியுமா?

அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் அதிகம் தங்கம் சேரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நகைக்கடைகளில் ஆண்டு தோறும் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 

அட்சய திருதியை பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.  திருதியை திதி நேற்று காலை 6.33 மணிக்கு தொடங்கி இன்று ( மே11) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தன. புதியபுதிய டிசைன்களில் நகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

அட்சய திருதியை முன்னிட்டு, சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6 மணிக்கே நகைக் கடைகள் திறக்கப்பட்டன. அதிகாலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.  நகைக் கடைகளில் விற்பனை களைகட்டியது. நேற்று ஒரேநாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.1,240 வரை அதிகரித்தது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொண்டு வந்த பணத்திற்கு எப்படி நகை வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தனர். எனினும் நகைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் மதிய வேளைகளிலும் நகைக் கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால், கடைகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஜூஸ், மோர், தர்பூசணி போன்றவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

நேற்றைய தினம் காலை 6 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,660-க்கு விற்பனையானது. பின்னர், காலை 8 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,705க்கு விற்பனையானது. இதற்கிடையே, பிற்பகல் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது.
அதன்படி கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6,770க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160க்கு விற்பனையானது. 

தமிழ்நாட்டில் மட்டும் நேற்றைய தினம் சுமார் ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் நகைகள் 80 சதவீதமும், நாணயங்கள் 20 சதவீதமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  தங்க நாணயங்கள் வாங்க வந்தவர்களுக்கு சிறப்புக் கவுன்ட்டர் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்தாலும், நேற்று விற்பனை அதிகரித்தது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 14,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் என நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.90க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.90,000-ஆக இருந்தது.

இதனிடையே நேற்றைய தினம் தங்கம் மூன்று முறை உயர்ந்த நிலை இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.6750 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54000 ஆக விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow