ருசியில் பட்டையை கிளப்பும் ‘சைவ மீன் குழம்பு’ - எப்படி செய்வது?

நாவில் நாட்டியமாடும் செட்டிநாடு உணவுகள் என்கிற தலைப்பில், செட்டிநாடு உணவு வகைகள் தயாரிப்பு குறித்த தொடர் நமது குமுதம் சிநேகிதி இதழில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

Mar 26, 2025 - 13:13
ருசியில் பட்டையை கிளப்பும் ‘சைவ மீன் குழம்பு’ - எப்படி செய்வது?
saiva meen kuzhambu recipe

முத்து சபாரெத்தினம் அவர்கள் செட்டிநாடு உணவு வகை தயாரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வரும் நிலையில் இந்த கட்டுரையில் செட்டிநாடு உணவு வகைகளில் புகழ்பெற்ற ”சைவ மீன்குழம்பு” செய்வது எப்படி என்பதனை காணலாம்.

சைவ மீன்குழம்பு:

தேவையான பொருட்கள்: கடலைமாவு - 1/2 கப், வாழைக்காய், பெரிய சைஸ் தக்காளி - தலா 1, எண்ணெய் - 20 மில்லி, சின்ன வெங்காயம் 15, பூண்டு 10 பற்கள், இளம் கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, புளி -நெல்லிக்காய் அளவு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.

அரைக்க: வரமிளகாய் - 4, சோம்பு - 1/2 டீஸ்பூன், சீரகம், மிளகு, உப்பு - தலா 1/4 டீஸ்பூன், தேங்காய் கால் மூடி, சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல். தாளிக்க: எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, வெந்தயம் -தலா 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிய துண்டு, கறிவேப்பிலை -ஓர் இணுக்கு

Read also: Chettinad Aadi Kummayam: செட்டிநாடு பேவரைட் ஸ்வீட்.. கும்மாயம் செய்வது எப்படி?

செய்முறை எப்படி:

வாழைக்காயின் தோலைச் சீவி, குச்சிக் குச்சியாக நீளமாகச் சீவவும். கடலைமாவில் 1/4 டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தோசைமாவுப் பக்குவத்தில் கரைக்கவும். இந்த மாவை, சூடான தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி, நடுவில் 2. வாழைக்காய்த் துண்டுகளை 2 இன்ச் இடைவெளியில் போட்டு, மூன்றாகவோ நான்காகவோ மடித்து மடித்து எடுக்கவும். இதை, மீன் துண்டுகள்போல வெட்டி, எண்ணெய்யில் பொரித்துவைக்கவும்.

சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சுத்தம்செய்து, நறுக்கி வைக்கவும். புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து, கடுகு, உளுந்து, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும். இதில், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றவும். 2 கொதிகள் வந்ததும், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்றாகக் கொதிவரத் துவங்கியதும், பொரித்துவைத்த வாழைத் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும்.

தற்போது ரொம்பவும் கிளறாமல், மெதுவாகக் கிளறி இறக்கினால் அட்டகாசமான சைவ மீன்குழம்பு தயார். அப்புறம் என்ன அன்பானவர்களுக்கு பரிமாறி அசத்திடுங்க.

Read more: Mutton stew: கேரளா ஸ்டைலில் சுவையான ‘மட்டன் ஸ்டூ’ - ஈஸியா செய்ய சூப்பர் வழி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow