கிறித்துவக் கல்லறைகளில் அடக்கம் செய்வது குறித்த புதிய அரசிதழ் வெளியீடு..!

கிறித்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வது தொடர்பான விதிகளை திருத்தி  அரசிதழ் வெளியீடு..!

Feb 3, 2024 - 12:21
கிறித்துவக் கல்லறைகளில் அடக்கம் செய்வது குறித்த  புதிய அரசிதழ் வெளியீடு..!
கிறித்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வது தொடர்பான விதிகளை முதலமைச்சர் அறிவிப்பின்படி திருத்தி  அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் கடந்த ஜனவரி 9-ம் தேதி சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கிறித்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு தற்போதுள்ள விதிகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
இதன்படி, இதன்படி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டத்தில் திருத்தம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, சவப்பெட்டியில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்குப் பிறகு வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
மேலும், மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளித்தும், உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளித்தும்  இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து, சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள கிறித்துவக் கல்லறையில் இருப்பதைப் போன்று உடல்களை அடுக்ககப் பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் புதிய விதி, தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள கிறித்துவக் கல்லறைகளுக்குப் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow