TN Governor RN Ravi: ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்த உச்சநீதிமன்றம்.. தீர்ப்பால் முதல்வர் ஹேப்பி
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கை "சட்டவிரோதமானது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வரும் சூழ்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார் ஆளுநர். அரசியலமைப்பு சட்டவிதிகளை ஆளுநர் மீறுவதாக கூறி உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு.
இதுத்தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது.
ஆளுநரின் செயல் சட்டவிரோதம்:
”சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம். மசோதாக்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் கூறுகையில், குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும், உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ன் படி ஒப்புதல் அளிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பின் இறுதியில் அம்பேத்கர் அவரின் சொல்லை நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். “ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்”
சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு:
தீர்ப்பு வந்த சமயம், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெற்று கொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது;
”வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பிய பல முக்கிய சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். அந்த மசோதாக்களை மீண்டும் சட்டபேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். அதற்கு ஒப்புதல் வழங்காமல் இருந்த ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் கிடைத்த வரலாற்று வெற்றியாகும் இது. மாநிலங்களின் உரிமைகளை காக்க என்றும் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






