MP, MLA-க்கள் லஞ்சம் வாங்கினால் வழக்கு பாயும்! உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு...
நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி தப்ப முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க மற்றும் வாக்களிக்க எம்.பி, எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றால் சிறப்புரிமைகளை பயன்படுத்தி தப்பிக்க முடியாது எனவும் நிச்சயம் வழக்குப்பதிவு செய்யப்படும் பாயும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் உறுப்பினர்கள், தீர்மானங்கள் மீது வாக்களித்தல், கேள்வி எழுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக 1998-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தபோது, 3 நீதிபதிகள் லஞ்சம் பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அரசியலமைப்புச் சட்டம் 105 (2) மற்றும் 194 (2) ஆகிய இரண்டின் கீழ் விலக்களிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க, எம்.பிக்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர் சீதா சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அரசியலமைப்புச் சட்டம் 194 (2)-ன் படி ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதில் இருந்து சீதா சோரன் விலக்கு கோரினார். இந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இதன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் கொண்ட அமர்வு இன்று (மார்ச் 04) தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா, சஞ்சய்குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 7 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பின்படி, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவைகளில் கேள்வி கேட்பதற்கும், தீர்மானங்கள் மற்றும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும் சக உறுப்பினர்கள் அல்லது கட்சிகளிடமிருந்து லஞ்சம் பெற்றால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும் என ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு லஞ்சம் பெறுவது என்பது நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர் பதவியின் மரியாதை மற்றும் பொது வாழ்க்கையின் நேர்மையையே சீர்குலைக்கும் செயல் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு லஞ்சம் பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய விலக்கு அளிக்கப்படும் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு முரணானது எனவும் குறிப்பிட்டனர்.
எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்பது லஞ்சம் பெறுவதற்காக அல்ல என்றும் தெரிவித்து தீர்ப்பளித்துள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது X தள பதிவில், தூய்மையான அரசியல் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் சிறப்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?