சென்னையில் மழைக்கு வாய்ப்பு... தமிழகத்திற்கு 5 நாட்கள் வானிலை அப்டேட்!

இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Jul 22, 2026 - 14:52
சென்னையில் மழைக்கு வாய்ப்பு... தமிழகத்திற்கு 5 நாட்கள் வானிலை அப்டேட்!

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, ஜூலை 22 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளையும் இதேபோன்ற வானிலை நீடிக்கும்.

மேலும், ஜூலை 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow