'துன்புறுத்தக் கூடாது'... செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் சோதனை ,விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
தமிழ்நாட்டின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக கூறியது. அதன்படி ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. குதிரை பேர வழக்கில் எங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என்று நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய பின்னும் தொடர்ந்து சோதனைகள் நடத்தி வருகின்றன.
மேலும் நாங்கள் சட்டப்படியான எந்த புலன் விசாரணையையும் தடுக்கவில்லை. ஆனால் காவல் துறையில் நிலுவையில் உள்ள ஏதேனும் வழக்குளின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்பட்டால் பிஎன்எஸ்எஸ் 35(3) வது பிரிவின் கீழ் முறைப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
நாங்கள் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால் சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கேட்டுக் கொண்டனர்.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது, மனுவில் பொதுவான உத்தரவு கோரப்பட்டுள்ளதுடன், பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதால், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதற்கு செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, குதிரைப் பேர வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், வேறு வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகவும், விசாரணையில் எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குதிரைப் பேர வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், மனுதாரர்கள் இன்னும் சரணடைந்து அந்த நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டது. மேலும், வேறு வழக்குகளில் எதிர்கால நடவடிக்கைகளை முன்கூட்டியே தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தாக்கல் செய்த இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
What's Your Reaction?