தவெக மாநாடு: விமர்சையாக நடந்த பந்தல் கால் நடும் நிகழ்வு 

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெக மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நிகழ்வு நடைபெற்றது.

Oct 4, 2024 - 09:48
தவெக மாநாடு: விமர்சையாக நடந்த பந்தல் கால் நடும் நிகழ்வு 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனை பரிசீலித்து  காவல்துறை 17 கடும் நிபந்தனைகளுடன் இந்த மாதம் 27ஆம் தேதி  மாநாடு நடத்த அனுமதி அளித்திருந்தது.  

கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான பணிகளை தீவிரமாக செய்துவரும் நிலையில், பந்தக்கால் நடும் நிகழ்வு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அந்தவகையில் தவெக மாநாடு நடப்பதற்கு முன்பான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நிகழ்வு இன்று (அக். 4) காலை 4:30 முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கும் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில், இன்று காலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நிகழ்வு நடைபெற்றது. காலை சுமார் 5 மணி அளவில் நடந்த இந்த பந்தல்கால் நடும் நிகழ்வில் விஜய் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பந்தல் கால் நிகழ்வின் முதல் நிகழ்வாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்ட கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்த பந்தல்கால் நடும் நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மற்றும் கோயில்களில் இருந்து அங்கு அர்ச்சனை மற்றும் பிரார்த்தனை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் புனித நீர் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து இந்த பொருட்கள் மற்றும் புனிதநீர் கொண்டு பந்தக்கால் நிகழ்வு வேத மந்திரங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது. அப்போது கட்சியின் தொண்டர்கள் கட்சியின் தலைவர் விஜய் வாழ்க, வருங்கால முதலமைச்சர் வாழ்க என கோஷம் எழுப்பி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

இந்த நிகழ்வுக்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow