"ஆளே இல்ல, பெல்லு..!" காலியான இருக்கைகளுக்கு ஆர அமர பாடம் எடுத்த அமைச்சர்.. ஓ இவரா ?!
அமைச்சர் பேச்சை கேட்க ஆர்வம் காட்டாத கட்சித் தொண்டர்கள், வரவேற்புக்காக வைத்திருந்த வாழைத்தாரை பதுங்கிப் பதுங்கி எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் 6 தொகுதிகளுக்கான பொதுக்கூட்டத்தை திமுக நடத்தியது. இதற்காக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம், ரிஷிவந்தியம், கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தங்களது கட்சியினர்களை வாகனங்கள் மூலம் திமுகவினர் அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கிப் பேசினார்.
அப்போது அமைச்சர் பேசுவதற்கு முன்பே அழைத்து வரப்பட்ட "கழக"த்தினரும் பொதுமக்களும் கூட்டத்தை விட்டு வெளியேறினர். அப்போது "திமுக உடன் பிறப்புகள்" பொதுமக்களை தடுத்து நிறுத்தியும் அதனை மதிக்காமல் சாரை சாரையாக மக்கள் வெளியேறினர். இவ்வாறாக பொதுக்கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அமைச்சர் பேசுவதற்கு முன்பாகவே கூட்டம் காலியானது.
ஆனால் அப்போதும் நம்பிக்கையை தளரவிடாமல் காலி இருக்கைகளைப் பார்த்து அரை மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார். "ஆளே இல்லாத கடையில், யாருக்கு டீ ஆத்தற, உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?" என்பதற்கு ஏற்ப அமைச்சர் பேசியது நகைப்பை ஏற்படுத்தியதாக எதிர்கட்சிகள் குறிப்பிட்டன.
இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம், வரவேற்புக்காக வைத்திருந்த வாழைத்தாரை பதுங்கிப் பதுங்கி பொதுமக்கள் எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?