ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் வழங்கிய குடியரசுத் தலைவர்
இயக்குநர் மணி ரத்னம் தேசிய விருது வாங்கும்போது நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தார்.
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம், நடிகை நித்யா மேனன், நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோருக்கு தேசிய விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் திரைப்படங்களையும், திரைப்படக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது.2022ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கெளவித்தார்.
தமிழில் பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்கான விருது சுபாஸ்கரனுக்கும், சிறந்த இயக்குநர் மணிரத்னம் மற்றும் சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒலி பதிவுக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தேசிய விருதினை வழங்கினார்.
இதேபோல் சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கும், சிறந்த நடிகராக காந்தரா படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கும், சிறந்த நடன இயக்குநராக சதீஷ்கிருஷ்ணனுக்கும், சிறந்த சண்டை பயிற்சிக்காக கேஜிஎஃப் 2 படத்திற்காக அன்பறிவ் சகோதர்களுக்கும் தேசிய விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.
குறிப்பாக இயக்குநர் மணி ரத்னம் விருது வாங்கும் போது நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் விருது வாங்கும் போதும் கைதட்டி உற்சாகப்படுத்தினார். இதேபோல் பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
மேலும் தேசிய விருதினை தனது கையில் வாங்கும் போது நடிகை மானசி பரேக் எமோஷனலாகி கண்ணீர்விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?