Raghu Thatha: இந்தி மொழிக்கு எதிரானதா 'ரகு தாத்தா'.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
'ரகு தாத்தா' இந்தி திணிப்பு குறித்து பேசுவதால், கீர்த்தி சுரேஷை குறிவைத்து ஒருசிலர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால் 'ரகு தாத்தா' திரைப்படம் இந்தி திணிப்பு குறித்து மட்டும் பேசுவதாகவும், இந்தி மொழியை தவறாக விமர்சிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: தமிழ் திரையுலகில் இன்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலாவது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'தங்கலான்'. இதில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 2வது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' திரைப்படம்.
3வது சுமன் குமார் இயக்கத்தில் வெளியான 'ரகு தாத்தா' திரைப்படம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். மேற்கண்ட 3 படங்களில் 'தங்கலான்' மற்றும் 'டிமான்டி காலனி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதேபோல் 'ரகு தாத்தா' திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
1970ம் ஆண்டு இந்தி திணிப்பை மையமாக கொண்டு 'ரகு தாத்தா' படம் வெளியாகி உள்ளது. இதேபோல் பெண்களின் உரிமை மற்றும் முன்னேற்றம் குறித்தும் 'ரகு தாத்தா' பேசுகிறது. இன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் கருத்து கூறியுள்ள ஒரு ரசிகர், ''1970ம் காலக்கட்டத்தில் நடந்த கதையை எளிமையாக கூறி இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். பார்த்து ரசிக்க நல்ல ஒரு பொழுதுபோக்கு படம். பல இடங்களில் நகைச்சுவை காட்சிகள் அருமையாக உள்ளன. குறிப்பாக கடைசி 30 நிமிடங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. அதே வேளையில் சில இடங்களில் படம் மெதுவாக செல்வது போல் உள்ளது. இதேபோல் சில ரிபீட் சீன்களும் குறையாக உள்ளன'' என்று கூறியுள்ளார்.
இன்னும் சிலர், ''தங்கலான் மற்றும் 'டிமான்டி காலனி 2' திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படமும் சைலண்ட்டாக வெற்றி பெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்துக்கு பெரும் பலமாக உள்ளது. இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படங்களில் ரகு தாத்தாவும் ஒன்று'' என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அதே வேளையில், 'ரகு தாத்தா' இந்தி திணிப்பு குறித்து பேசுவதால், கீர்த்தி சுரேஷை குறிவைத்து ஒருசிலர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால் 'ரகு தாத்தா' திரைப்படம் இந்தி திணிப்பு குறித்து மட்டும் பேசுவதாகவும், இந்தி மொழியை தவறாக விமர்சிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் 'ரகு தாத்தா' திரைப்படம் இந்தி திணிப்பை மட்டுமின்றி பெண்களின் உரிமை குறித்து ஆணித்தரமாக எடுத்துரைப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
What's Your Reaction?