Sani peyarchi: என்னது சனிப்பெயர்ச்சி இல்லையா? திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் விளக்கம்
உண்மையில் சனிப் பெயர்ச்சி எப்போது? என்கிற குழப்பம் ஆன்மிக பக்தர்கள் இடையே நிலவும் சூழலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியில் சனிப்பெயர்ச்சி என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. திருக்கணித முறைப்படி வருகிற 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக பல்வேறு ஜோதிடர்கள் சனிப்பெயர்ச்சிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களை தெரிவித்து வருகின்றனர். ஆன்மிக பக்தர்கள் இதுதான் உண்மையான சனிப்பெயர்ச்சியா? இல்லை அடுத்தாண்டு நடைப்பெறுவது தான் சனிப்பெயர்ச்சியா? என்கிற குழப்பத்தில் உள்ளனர்.
இதனிடையே, சனிப்பகவானுக்கு புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் வரும் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. செய்தி அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு-
” பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn's transit) தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
வாக்கிய பஞ்சாங்கம்:
இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்-அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026 ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறில் கடைப்பிடிக்கக் கூடிய வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி அடுத்த ஆண்டு அதாவது, 06.03.2026 அன்று தான் சனிப்பெயர்ச்சி நடக்கும் என சில ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more: திருக்கணித சனிப்பெயர்ச்சி 2025: மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
What's Your Reaction?






