திருக்கணித சனிப்பெயர்ச்சி 2025: மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
திருக்கணித முறைப்படி வருகிற 29 ஆம் தேதி, சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த பெயர்ச்சியானது மேஷம் ராசிகாரர்களுக்கு எவ்வாறு இருக்கும்? பலன்கள் என்ன? பரிகாரங்கள் என்ன? என்பதனை குமுதம் வாசகர்களுக்காக கணித்து நம்முடன் பகிர்ந்துள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

ஒன்பது கிரஹங்களுமே குறிப்பிட்ட காலகதியில் நகர்ந்துகொண்டே தான் இருக்கின்றன. என்றாலும் சில கிரஹங்களின் நகர்ச்சி மட்டுமே பெருமளவில் பலராலும் கவனிக்கப்படுகிறது. அத்தகைய கிரஹங்களுள் ஒன்றான சனியின் பெயர்ச்சி தற்போது திருக்கணித முறைப்படி 29.3.2025 அன்று நிகழ இருக்கிறது. மேஷ ராசிக்கு இந்த திருக்கணித சனிப்பெயர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதனை காணலாம்.
உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்துக்கு வருகிறார் சனிபகவான். இதனால் ஏழரை சனியின் ஆதிக்கம் உங்களுக்குத் தொடங்குகிறது. அதேசமயம் அவர் விரயஸ்தானத்தில் இருப்பதும், அடுத்து வரும் குரு ராகு-கேது பெயர்ச்சிகளால் ஏற்படும் கோசார மாற்றங்களும் இது உங்களுக்கு சங்கடங்கள் குறைந்து சாதகங்கள் அதிகரிக்கும் காலமாகவே இருப்பதைக் காட்டுகிறது.
அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்:
அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகள் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதியம் கைகூடும். உடனிருப்போர் விஷயங்களில் தலையிட வேண்டாம். பணிசார்ந்த பயணங்களும் அதனால் ஆதாயமும் உண்டு. மறைமுக எதிரிகளின் முகமூடிகள் விலகும். இந்த சமயத்தில் முகஸ்துதியில் இருந்து விலகி தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது நல்லது.
இல்லத்தில் நிம்மதி நிலவும். நீண்டகாலம் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும் பணவரவு சீரானாலும் செலவும் சேர்ந்து வரும். வீடு, வாகனம், ஆடை ஆபரணம், பொருள் சேரும். பூர்வீக சொத்தில் இருந்த இழுபறி நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். இளம் வயதினர், பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். சுணங்காமல் உழைத்தால், சுபிட்சம் அதிகரிக்கும். வங்கிக் கடன், வர்த்தக அனுமதிகள் கண்டிப்பாகக் கைகூடும். விவசாயிகள் கணிசமான விளைச்சலால் மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு எப்படி இருக்கும்?
மாணவர்கள் திறமைக்கு ஏற்ப ஏற்றம் ஏற்படும். சிலருக்கு படிக்கும் காலத்திலேயே எதிர்காலப் பணிக்கான ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத்தொடங்கும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். மேலிடத்திடம் பேசும்போது வீண் உணர்ச்சிவசப்படல் வேண்டாம். பயணத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. நரம்பு, மூட்டுகள், கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்.
பரிகாரம்:
திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று வருவது வாழ்வை தித்திக்க வைக்கும். ஆன்மிகம் தொடர்பான தகவல்களை மேலும் தெரிந்துக் கொள்ள குமுதம் குழுமத்தின் “பக்தி” ஆன்மிக இதழை சப்ஸ்கிரைப் செய்து பயனடையுங்கள்.
(திருநள்ளாறில் கடைபிடிக்கக் கூடிய வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி அடுத்த ஆண்டு அதாவது 06.3.2026 அன்றுதான் சனிபெயர்ச்சி நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது)
What's Your Reaction?






