திருவண்ணாமலையா? அருணாச்சலமா? சர்ச்சைக்குள்ளாகும் அரசு பஸ்
திருப்பதி செல்லும் பேருந்துகளில் திருவண்ணாமலை என்ற பெயருக்கு பதிலாக அருணாச்சலம் என ஆங்கிலத்தில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுப்பொருளாகியது. இதுத்தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் என அழைக்கப்படும் திரு அருணாசலேசுவரர் திருக்கோயில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே திருவண்ணாமலைக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெளிமாநில பக்தர்களின் வருகையினை குறிப்பிட்டு திருவண்ணாமலையினை தமிழர்களிடமிருந்து பறிக்கும் செயல் நடைப்பெறுவதாக ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு பேருந்துகளில் திருவண்ணாமலை என்ற பெயருக்கு பதிலாக அருணாச்சலம் என குறிப்பிடப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஜூன் மாதமே எழுந்த பிரச்னை:
இதுத்தொடர்பாக பல்வேறு முறை, புகார்கள் தெரிவித்தும் அரசின் சார்பில் நடவடிக்கை இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் இயக்குனர் ஐயன் கார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், அருணாச்சலம் என்கிற போர்டு நீக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். தனது பதிவில் கோரிக்கை மனுவுக்கு, அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான புகைப்படம் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், கோரிக்கை மனுவுக்கு பின்வருமாறு பதிலளிக்கப்பட்டுள்ளது. “மேற்கண்ட கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டது. சங்கராபுரம் கிளை பேருந்து எண் TN32 N4861 கள்ளக்குறிச்சி முதல் திருப்பதி வரை செல்லும் அரசு பேருந்தில் அருணாசலம் என ஆங்கிலத்தில் டிஜிட்டல் போர்டில் வருவதை சங்கராபுரம் கிளை மேலாளர் அவர்கள் மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பதில் கோரிக்கை மனு தொடர்பான புகைப்படம் ஜூன் 27 ஆம் தேதி கையொப்பமிடப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்திலும் பெயர் மாற்றுவது எப்போது?
ஒரு பேருந்தில் மட்டும் பெயரை மாற்ற நடவடிக்கை எடுத்தால் போதுமா? மற்ற பேருந்துகளுக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என ஒரு சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேற்றையத் தினம், திருவண்ணாமலை அப்டேட்ஸ் என்கிற எக்ஸ் வலைத்தள பக்கத்தில், அரசு பேருந்துகளில் திருவண்ணாமலை என்பது அருணாச்சலம் என மாற்றப்பட்டுள்ளது என்று பல்வேறு பேருந்துகளின் புகைப்படங்களை இணைத்து ஒரு பதிவிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கமான “அரசு பஸ்” பதிலளித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மக்கள் திருவண்ணாமலையினை, அருணாச்சலம் என்றே அழைத்து வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக அரசு பேருந்துகளில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தாலும், அது தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அரசு உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






