”2006ல் ஆட்சியை பிடிப்போம்…” Confuse ஆன அமைச்சர்.. வைரலாகும் வீடியோ!
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என ஆண்டை மாற்றி அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து திமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து வீதி வீதியாக சென்று அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட இன்று பொறுப்பேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் குறிப்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய எல்லா பகுதிகளிலும் இன்றைக்கு அந்தந்த நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளிலிலே மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மிகச் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவி குறித்து எடப்பாடி குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தார். அதாவது, “செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது சட்டப்படி தான் நடந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி மக்கள் மத்தியிலே நம்பர் ஒன் முதல்வர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் ஆகையால் பொதுமக்கள் இடத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது வரவேற்பு இருக்கிறது” என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
மேலும், “சென்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த பகுதி பார்த்தீர்கள் என்றால் அதிமுக பிஜேபி நாம் தமிழர் உள்ளிட்ட காட்சிகளை விட நாங்கள் அதிகமாக ஓட்டு வாங்கி உள்ளோம். ஆக மொத்தத்தில் விஜய் – அதிமுக - பிஜேபி - நாம் தமிழர் என அனைவரும் ஒரே பக்கத்தில் இருந்தாலும் பதிலாக 2006 ல் ஆட்சியை பிடிப்போம்” என தெரிவித்தார். 2026ல் ஆட்சியை பிடிப்போம் என்று தெரிவிப்பதற்கு பதில் 2006ல் ஆட்சியை பிடிப்போம் என்று அமைச்சர் கூறியது அங்கு சலசலப்பு ஏற்படுத்தியது.
What's Your Reaction?