”அட்வைஸ்லாம் யாருக்கும் அவசியமில்ல” - உதயநிதி துணை முதல்வர் பதவி குறித்து பேசிய கனிமொழி
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு “இந்த காலத்தில் யாருக்கும் அட்வைஸ் அவசியமில்லை. அவர்களுக்கே என்ன செய்யவேண்டும் என்பது தெரியும்" என தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு “இந்த காலத்தில் யாருக்கும் அட்வைஸ் அவசியமில்லை. அவர்களுக்கே என்ன செய்யவேண்டும் என்பது தெரியும்" என தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி
தாத்தா 5 முறை முதலமைச்சர், அப்பா தற்போதைய முதலமைச்சர்.. பொன்விழா கண்ட அரசியல் கட்சியின் தலைவர்... இதுபோல பெரும் அரசியல் பின்னணியை கொண்ட உதயநிதி ஸ்டாலின், ஆரம்ப கட்டத்தில் அரசியலில் கவனம் செலுத்தாமல், சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தினார். ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வந்தார். பின்னர் படங்களை விநியோகம் செய்யவும் தொடங்கினார். திரைக்கு பின்னால் பிசியாக இருந்த உதயநிதி, 2012ல் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் திரையுலகில் நடிகராக அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்தார்.
பின்னர், செல்லும் இடமெல்லாம் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி உதயநிதியை பின் தொடர்ந்தது.. அதற்கு அவரின் பதில், இல்லை என்பதாகவே இருந்தது.. ஆனால் அவ்வப்போது திமுக மேடைகளில் தென்படத் தொடங்கினார். தொடர்ந்து, 2018ல் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தவர். 2019ல் திமுக நடத்திய கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று அதிரடி காட்டினார்.
2019ல் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் உதயநிதி மேற்கொண்ட பிரசார யுக்தி, தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று இயல்பான நடையில் பேசி, மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்து கொண்டார். பிரசாரத்தின்போது அவர் கையில் எடுத்து செங்கல், தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தது.
பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற உதயநிதி, ஆரம்பத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. பின்னர் தொண்டர்கள், நிர்வாகிகளின் தொடர் கோரிக்கையால், 2022 டிசம்பரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார்.
அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி, செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் ஃபார்முலா 4 கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டு போட்டிகளை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி, விளையாட்டு துறையில் தமிழகத்தை முன்னிலைப் படுத்தினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முட்டையை கையில் எடுத்து, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ததில் பெரும் பங்கு வகித்தார்.
சமீப காலமாகவே அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை எழுப்பத் தொடங்கினர். இதுகுறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது, வலுத்துவிட்டது ஆனால் பழுக்கவில்லை என மழுப்பலாகவே பதிலளித்தார். இதையடுத்து, அமெரிக்க பயணம் சென்றபோது, மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயணம் முடிந்து நாடு திரும்பியதும், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அதே கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட்டது, அதற்கு, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஆனால் ஏமாற்றம் இருக்காது என பதிலளித்தார்
அதன் தொடர்ச்சியாக, துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்படுவார் என தினமும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், செப்திமுக பவள விழா காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த கையோடு, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “துணை முதலமைச்சராக யார் பதவியேற்க வேண்டும் என்பது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. உதயநிதிக்கு அந்த வாய்ப்பை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். என்னுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நான் யாருக்கும் அட்வைஸ் கொடுப்பதில்லை. இந்த காலத்தில் யாருக்கும் அட்வைஸ் அவசியமில்லை. அவர்களுக்கே என்ன செய்யவேண்டும் என்பது தெரியும்" என தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி
What's Your Reaction?