நயினார் நாகேந்திரன்: அம்மாவின் தொண்டன் முதல் பாஜக-வின் தலைவர் வரை.. வெற்றிகளும் சர்ச்சைகளும்
தமிழக பாஜக-வின் 13 வது மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவின் விசுவாசி முதல் பாஜக மாநிலத் தலைவர் பதவி வரை நயினார் நாகேந்திரன் கடந்து வந்த அரசியல் பாதை குறித்து இந்த செய்தித்தொகுப்பு விவரிக்கிறது.

நெல்லைக்கும் - குமரிக்கும் இடைப்பட்ட நாகர்கோவில் அருகே அமைந்துள்ள வைதீஸ்வரம் என்ற கிராமம் தான் நயினார் நாகேந்திரனுக்கு சொந்த ஊர். 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி பிறந்த நயினார் நாகேந்திரன் சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். இதையடுத்து நெல்லையில் உள்ள MDT இந்து கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை முடித்த நயினார், தொடர்ந்து, ஆரல்வய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
கல்லூரி காலத்தில் எம்.ஜி.ஆர்-யின் பேச்சு மற்றும் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நயினார் நாகேந்திரன், அவர் மறைந்த 2 ஆண்டுகளில் அதிமுக-வில் அடிமட்டத் தொண்டனாக இணைந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி பிளவுபட்டிருந்த நிலையில் ஜெ. அணியில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக செயல்பட்ட நயினாருக்கு, கட்சியில் அடுத்தடுத்து பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அந்தவகையில் முதலில் பணகுடி நகரச் செயலாளார், திருநெல்வேலி மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என அடுத்தடுத்து நயினாருக்கு பதவிகள் வழங்கப்பட்டது.
முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினர்:
தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. களம் கண்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சரவையில் தொழில் துறை, மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஆகியவற்றை வழங்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.
2006 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெறும் 606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிக்கொடுத்தார். ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலிலும் நெல்லை தொகுதியில் நயினாரை மீண்டும் களமிறக்கினார் ஜெயலலிதா. முந்தைய தேர்தலில் நழுவவிட்ட வெற்றியை 2011-ல் நயினார் மீண்டும் பற்றிக்கொண்டாலும், ஒரு சில காரணங்களால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து கட்சிப் பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நயினார் நாகேந்திரன், 2016 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார்.
பாஜகவிற்கு மாறிய நயினார்:
தேர்தல் தோல்வியால் துவண்டுபோன நயினார் நாகேந்திரனுக்கு, ஜெயலலிதாவின் மரணமும் அதைத்தொடர்ந்து அதிமுக-வில் ஏற்பட்ட பிளவும் அயற்சியை ஏற்படுத்தியது. ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணி, இ.பி.எஸ். அணி, டிடிவி தினகரன் அணி என அதிமுக பல அணிகளாக சிதறுவதைக் கண்டு மனம் வெதும்பிய நயினார் நாகேந்திரன், 2017-ல் பாஜக-வில் தம்மை இணைத்துக்கொண்டார். கட்சி மாறினாலும் ஜெயலலிதா மீதான விசுவாசம் குறையாத நயினார் நாகேந்திரன் பாஜக மேடைகளில் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து புகழ்பாடி வந்தார். அதிமுக-வில் இருந்த போது நயினாருக்கு இருந்த இந்து மத பக்தி, பாஜக-வுக்கு மாறியதும் இந்துத்துவா பக்தியாக உருவெடுத்தது.
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து அப்போது பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், இனிமேல் இந்துக்களை பழித்துப் பேசினால் கொலை செய்யவும் தயாராகுங்கள் என்றார். மேலும், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வைரமுத்துவின் நாவை அறுப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் பேசியது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட தமக்கு தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பாஜக-வில் முக்கிய இடம் கிடைக்க வேண்டும் என்று காய்களை நகர்த்தினார் நயினார் நாகேந்திரன். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட நயினாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நெல்லையை விட்டு ராமநாதபுரம் செல்வதா? என்ற தயக்கத்தில் இருந்த நயினார் முதல் வாய்ப்பை விட்டுக்கொடுக்காமல் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையவே, மீண்டும் நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார் நயினார் நாகேந்திரன். இந்த முறை 23 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், இந்த முறை பாஜக எம்.எல்.ஏ.-வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். நயினாருக்கு உள்ள அனுபவம் காரணமாக அவருக்கு பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
டெல்லி அரசியல் நோக்கி காய் நகர்த்திய நயினார்:
மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ., நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பிய போதெல்லாம், சட்டப்பேரவையில் பாஜக-வின் குரலாக ஒழித்தார் நயினார் நாகேந்திரன். ஆனாலும் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் அவருக்கு மட்டுமே செல்வாக்கு இருப்பது போல் ஒரு தோற்றம் காணப்பட்டது. சீனியர் தலைவர்கள் எல்லாம் பத்தோடு, பதினொன்றாக காட்சியளிக்கவே டெல்லி அரசியலை நோக்கி காய் நகர்த்தினார் நயினார் நாகேந்திரன்.
எம்.எல்.ஏ. பதவியில் இருந்தபோதே எம்.பி.-யாகி நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே நயினாரின் விருப்பமாக இருந்தது. கட்சி செல்வாக்கை தாண்டி தமக்கு சாதகமாக உள்ல நெல்லை தொகுதியை கைப்பற்ற டெல்லியை நோக்கி கச்சிதமாக காய் நகர்த்தினார், நயினார் நாகேந்திரன். 2024 மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதிக்கு தமிழிசை செளந்தரராஜன், சரத்குமார் உள்ளிட்டோர் குறிவைத்த போதும், கட்சி அறிவிக்கும் முன்னரே தேர்தல் அலுவலகம் திறந்து பணிகளை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்.
இடைவிடாத முயற்சிகளால் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படவே, தேர்தல் களத்தில் உற்சாகத்துடன் பணியாற்றினார். ஆனால் தேர்தல் பரப்புரை சமயத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாஜக வேட்பாளர் நயினார் நாகேதிரனுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழவே அவருக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது.
மக்களவைத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் 4 கோடி ரூபாய் விவகாரத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் நயினார் நாகேந்திரன். இருந்தபோதும், தனது முயற்சிகளில் சற்றும் மன தளராமல் போராடி, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை இறக்கிவிட்டு, பாஜக-வின் புதிய மாநிலத் தலைவராகி இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
What's Your Reaction?






