முருகனிடம் இருந்து வந்த அழைப்பு.. யாசகம் எடுத்து சீரியல் நடிகை தீபா பாபு கட்டிய கோவில்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏலூர்பட்டி என்கிற கிராமத்தில் புதியதாக தான் கட்டிய காசி விசுவநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை தீபா பாபு.
கோவில் கட்டுவது எல்லோராலும் முடியாது. இறைவன் அருள் இருந்தால் மட்டுமே அந்த விசயம் கைகூடி வரும். சின்னத்திரை நடிகைகள் என்றாலே நடனமாடி ரீல்ஸ் மட்டும்தான் போடுவார்களா என்ன? கோவில் கட்டி கும்பாபிஷேகம் கூட செய்வார்கள் என்று நிரூபித்துள்ளார் டிவி சீரியல் நடிகை தீபா பாபு.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர், அன்பே சிவம் உட்பட பல சீரியல்களில் நடிகை தீபா நடித்து அதற்குப் பிறகு இப்போது சீரியல்களில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் தீபா ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு இவர் இரண்டாவது திருமணம் செய்தது, அதற்கு பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து இவர் பல பேட்டிகளிலும் பேசி இருந்தார்.
சீரியல் நடிகை தீபா பாபு கட்டியிருக்கும் கோவில் பற்றிய செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள, ஏலூர்பட்டி என்கிற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கோவில் கட்டியதில் நடிகை தீபாவின் பங்கும் உள்ளதாம்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ள தீபா, நான் ஒரு முருக பக்தை. எனக்கு முருகனைப் பார்க்கணும் போல் தோன்றினால் உடனடியாக அறுபடை வீடுகளுக்கோ அல்லது முருகன் குடி இருக்கிற வேறு கோயில்களுக்கோ கிளம்பி விடுவேன்.மேலும், எனக்கு ஏதாவது சிக்கல், கஷ்டங்கள் வந்தால் முருகனைப் பார்க்க சென்று விடுவேன். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தாலே போதும் எனது பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
ஒரு நாள் நான் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயிருந்த போது முருகனின் பெயரில் உள்ள சுப்பிரமணி என்கிற சாமியாரைப் பார்த்தேன். அவர்தான், தொட்டியம் பக்கத்துல காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டு வருவதை எனக்குச் சொன்னார். அது மட்டும் இல்லாமல் காசி விஸ்வநாதர் ஆலயம் என்றாலும், ஆலயத்தில் உள்ளே முருகன் மற்றும் விநாயகருக்கு தனி தனி சன்னதிகள் அமைய இருக்கின்றது என்ற விஷயத்தையும் சொன்னார்.
அவரைப் பார்த்துட்டு வந்த சில நாட்களிலே, முருகனுக்கு கோவில் எழுப்ப நீ அங்கு போ என்று எனக்கு தோன்றியது. நான் ஒரு முருகன் பக்தை என்பதால் முருகனே நேரில் வந்து சொன்ன மாதிரி எனக்கு இருந்தது. அதனால் அடுத்த நாளே அந்த ஊருக்கு கிளம்பி போய் விட்டேன்.
ஒரு கோயில் கட்டுவது என்றால் சும்மா கிடையாது. அந்த ஊர் மக்கள், சாமியாருக்கு தெரிஞ்சவங்க, எனக்கு தெரிஞ்சவங்க என எல்லாரும் சேர்ந்து வேலைகளை செய்தோம். இப்போ எல்லா வேலைகளும் நல்லபடியா முடிஞ்சு, கும்பாபிஷேகம் நடக்கப்போகிறது. இந்த நல்ல விஷயத்தில், ‘மெட்டி ஒலி’ வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, நடிகர் அழகப்பன் ஆகியோருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நான் கோவில் குறித்த விஷயம் சொன்ன உடனே அவங்களும் ஆர்வத்தோடு இந்தப் பணியில் சேர்ந்துட்டாங்க.
இப்போது கும்பாபிஷே பத்திரிக்கையும் வந்து விட்டது. வரும் நாளை ( செப்டம்பர் 5) கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது எல்லோரும் வாங்க. அப்படி வர முடியாதவர்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த கோவில் கட்டுவதற்காக பாடி திருவலிதாயம் ஆலயத்தில் யாசகம் பெற்றுள்ளார் தீபா பாபு. அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தீபா பாபு.
What's Your Reaction?