தவெக மாநாடு பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம்- விஜய்யின் புதிய உத்தரவு
அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளதாக தவெக தலைமை கழகம் தகவல்
தவெக மாநாட்டு பணிகளில் விஜய் தீவிரம் காட்டியுள்ள நிலையில், நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்.27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக விழுப்புரம் காவல்துறையிடம் முறையாக மனு அளித்து அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாநாட்டிற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பந்தல்கால் நடப்பட்டு அதிகாலை பூஜைகள் செய்யப்பட்டது.
மேலும் தவெக மாநாட்டிற்கு தொகுதி மற்றும் மாவட்ட வாரிய தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வர மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.இந்த நிலையில், தவெக மாநாடு கொள்கைகள், மாநாட்டு பணிகள் குறித்து கட்சி தலைமையகத்தில் சமீபத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தொடர் மழை காரணமாக மாநாடு நடக்கும் சேறும் சகதியுமான காட்சி அளித்தது. இதனால் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தவெக மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள், தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் பார்க்கிங் வசதிக்காக கூடுதல் இடம் தேவைப்படுவதால் அதை தவெக தலைமை ஏற்பாடு செய்ய காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தவெக தலைவர் விஜய் மாநாட்டு பந்தலுக்கு வர சுமார் 1 கி.மீ தூரம் சிமெண்ட் சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், தவெக நிர்வாகிகள், தற்காலிக பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் நாளை நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தவெக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தல்படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், (அக்,.18ம் தேதி)நாளை வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர்.
பொருள்: 1.இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை 2. கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை 3.சமூகப் பொறுப்புணர்வு, கடமை. கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது 4.வெற்றிக் கொள்கைத் திருவிழா - விளக்கவுரை 5.மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு எனவே, இக்கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது
What's Your Reaction?