‘ரஜினிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி’- தலைப்பு கொடுத்த அமைச்சர்.. கலகலப்பான அரங்கம்!
துணை முதலமைச்சர் பதவி ரஜினியிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் என்னவென்றால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்பது தான். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், விமர்சகர்கள், தங்கள் நிலைப்பாட்டை கூறிவருகின்றனர். ஆனால் திமுகவினர் உதயநிதி துணை முதலமைச்சராக விரைவிலேயே நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, என்னிடம் அரசியல் கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள் என்று ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.
உதயநிதி துணை முதலமைச்சராகிறாரா என்பது குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளிக்காமல் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”நான் எனது ஃபோனில் யூ-டியூப் பார்த்துக் கொண்டிருந்தபோது தலைப்புகளை பார்த்து பயந்துவிட்டேன். காரணம் ‘உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா? ரஜினி ஆவேசம்’ என தலைப்பு வைத்துள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “துணைமுதல்வர் பற்றிய அறிவிப்பே இன்னும் வரவில்லை. அதற்கான முழு அதிகாரமும் முதலமைச்சரிடம் தான் உள்ளது. துணை முதல்வர் பற்றி, என்னிடமும், முதலமைச்சரிடமும் கேட்கிறீர்கள் சரி. ரோட்டில் போற எல்லாரிடத்திலும் துணை முதல்வர் பதவி பற்றி கேட்கிறீர்கள். ரஜினிகாந்த் ஷூட்டிங்கிற்காக ஏர்போர்ட் வந்தவர். அவரிடம் இந்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்கிறீர்கள்.
இப்போது நான் பேசியதற்கு கூட என்ன தலைப்பு வைக்க போகிறார்களோ தெரியவில்லை. நானே சொல்கிறேன், ‘அமைச்சர் உதயநிதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலடி’ என வைத்துக்கொள்ளுங்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.
What's Your Reaction?