மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணியை வீழ்த்த வங்க தேச அணிக்கு 357 ரன்கள் தேவை
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிகெட் போட்டியில் மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்துவதற்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகின்றன.
இந்தியா - வங்கதேசத்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற வேண்டுமென்றால் இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகின்றன.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்யவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதனைத் தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் தடுமாறி சொற்பம் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன்32 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
308 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரிஷப் பந்த் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். ரிஷப் பந்த் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவற்றுள் 13 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. அப்போது ஷுப்மன் கில் 119 ரன்களுடனும் கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 287 ரன்களுக்கு டிக்ளேர் செய்தமையால் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது. ஜாகிர் ஹாசன் 33 ரன்களும், ஷாத்மன் இஸ்லாம் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் தற்போது களத்தில் உள்ளனர். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். இன்னும் போட்டி முடிய இரண்டு நாள்கள் உள்ள நிலையில் அணியின் வெற்றி பெற 357 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை வங்கதேச அணி தாக்குப் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?