கமலுடன் கைகோர்த்த சீமான்...வெளியான புதிய அப்டேட்!

‘மாயாண்டி குடும்பத்தினர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமாகி, பின்னர் அரசியல் வாழ்க்கையை நோக்கிச் சென்ற சீமான், தற்போது மீண்டும் நடிகராக உருவெடுக்க போவதைக் கண்டு அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 8, 2026 - 16:29
கமலுடன் கைகோர்த்த சீமான்...வெளியான புதிய அப்டேட்!
Seeman New Movie

அரசியல் மேடையில் அனல் பறக்க பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மீண்டும் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். அதுவும் சாதாரணமாக அல்ல... நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், அரசியலைத் தாண்டி சீமானின் நடிப்பை ரசித்து வந்த ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சினிமாவில் நடிக்க வந்தவர்... அரசியலில் தடம் பதித்தவர்!

தமிழ் சினிமாவில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் சீமான். இயக்குநராகவும், நடிகராகவும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய அவர், தொடர்ந்து ‘உச்சிதனை முகர்ந்தால்’, ‘நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.’, ‘சாட்டை படி குற்றம்’, ‘எவனோ ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

குறிப்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் சீமானின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. எதார்த்தமான உடல்மொழியும், இயல்பான நடிப்பும் அவருக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கின.

ஆனால், ஒரு கட்டத்தில் சினிமாவைத் தாண்டி அரசியலே தனது பாதை என முடிவு செய்த சீமான், நாம் தமிழர் கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் களமிறங்கினார். அதன்பிறகு தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், அரசியல் விமர்சனங்கள் என பரபரப்பாக இயங்கி வந்தார்.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியல் களத்துக்குப் பிறகு சீமான் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயனுடன் சீமான்... என்ன கேரக்டர்?

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம்தான் ‘சேயோன்’. மதுரையை மையமாகக் கொண்ட வாழ்வியலை பின்னணியாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முக்கியமான அப்டேட்டாக தற்போது சீமானும் படக்குழுவில் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுதான் இப்போது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது...

சிவகார்த்திகேயனுக்கு சீமான் அப்பாவாக நடிக்கிறாரா?

படத்தில் சீமானின் கதாபாத்திரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சீமான் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே ‘எல்ஐகே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், சீமான் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இப்போது மீண்டும் ஒரு இளம் ஹீரோவுக்கு அப்பாவாக சீமான் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தீபாவளி கிடையாது... பொங்கலுக்கு காத்திருக்கும் ‘சேயோன்’?

முதலில் ‘சேயோன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் தீபாவளி வெளியீட்டை குறிவைத்துள்ளதால், ‘சேயோன்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதன்படி, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘சேயோன்’ திரைப்படத்தை வெளியிட ராஜ்கமல் ஃபிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபக்கம் சிவகார்த்திகேயனின் மாஸ் ஹீரோ இமேஜ்... மறுபக்கம் மதுரை மண்ணின் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதை... இப்போது அதில் சீமானின் எதார்த்தமான நடிப்பும் சேர்ந்துள்ளது.

அதனால் ‘சேயோன்’ படத்தில் சீமானின் கதாபாத்திரம் என்ன? சிவகார்த்திகேயனுக்கு அப்பாவா? என்பதுதான் தற்போது கோலிவுட்டில் பேசப்படும் முக்கிய கேள்வியாக இருக்கிறது. அரசியல் மேடையில் சீமானை பார்த்த ரசிகர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை வெள்ளித்திரையில் பார்க்கும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow