உதய் கைது டூ விஜய்யின் மாஸ் ஸ்பீச் வரை.. சட்டமன்ற கூட்டத் தொடரின் டாப் நிகழ்வுகள்...! 

ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மக்கள் பிரச்னைகளைவிட ஆளும் தவெக–எதிர்க்கட்சியான திமுக இடையிலான அரசியல் மோதல்களும், உதயநிதி கைது, தொகுதி மறுவரையறை, எம்.எல்.ஏ.க்கள் கார் சர்ச்சை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் எழுந்த சர்ச்சைகளுமே அதிகம் பேசுபொருளாகின.

Sep 8, 2026 - 15:51
Sep 8, 2026 - 15:52
உதய் கைது டூ விஜய்யின் மாஸ் ஸ்பீச் வரை.. சட்டமன்ற கூட்டத் தொடரின் டாப் நிகழ்வுகள்...! 

உதயநிதி கைது

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நேரத்திலேயே அரசியல் களம் சூடுபிடித்தது... காவிரி உரிமைப் போராட்டம் தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையாக வெடித்தது. கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என திமுக தரப்பு விமர்சிக்க... சட்ட நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொகுதி மறுவரையறை

அடுத்ததாக... தொகுதி மறுவரையறை விவகாரம். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், தொகுதி மறுவரையறையை இன்னும் மத்திய அரசே கொண்டு வராத போது, திமுகவின் நிலைப்பாட்டை கேட்டு மற்ற பிரச்னைகளை தவெக அரசு திசை திருப்புவதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது.. 

எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்

இதற்கிடையே... எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் விவகாரம் மற்றொரு சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசின் நிதிநிலையை சுட்டிக்காட்டி, அரசு காரை ஏற்கமாட்டோம் என திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு செலவு ஒருபுறம்... மக்கள் பணம் குறித்த கேள்வி மறுபுறம் என விவாதம் சூடுபிடித்தது. 

சங்கி அமைச்சர் Vs பாத்ரூம் அமைச்சர்:

மின்சாரத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், 'கரூர் கம்பெனி' எனக் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'மாண்புமிகு சங்கி அமைச்சர்' என்று நிர்மல் குமாரை குறிப்பிட்டார். அதற்கு பதிலடி கொடுத்த நிர்மல் குமார், 'மாண்புமிகு மூன்று மணிநேரம் பாத்ரூமில் உட்காந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, கரூர் கம்பெனி என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டில் யார் எவ்வளவு நேரம் பாத்ரூமில் இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்துள்ளார்களா? முன்னாள் அமைச்சர் புள்ளி விவரங்களை பேசிக் கொண்டிருக்கும் போது முதலில் தவறாக பேசியது அமைச்சர்தான்" எனத் தெரிவித்தார்.

நீக்குவதால் என்ன பயன்? 

சட்டப்பேரவை பதிவிலிருந்து நீக்கப்பட்ட சில சர்ச்சை கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவுவது குறித்து உதயநிதி சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். “பதிவிலிருந்து நீக்கினாலும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது; அப்படியென்றால் நீக்குவதால் என்ன பயன்?” என்ற விவாதம் கவனம் பெற்றது

மூன்று ஃபைல்ஸ் டேபிளில் தான் இருக்கிறது..

”ஆதாரம், ஆதாரம் எனக் கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் பேசும்போது மூன்று துறைகளை ஆய்வு செய்து அந்த கோப்புகள் எனது மேசையில் தான் இருப்பதாகக் கூறினார். அவர் போகிற போக்கில் அதைச் சொல்லவில்லை, உண்மையில் அவை என் மேசையில் இருக்கின்றன. அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கிறது. திறக்க வைத்துவிடாதீர்கள். எதை, எப்போது திறக்க வேண்டுமோ அவை அப்போது திறக்கப்படும்” என்று கூறினார். அதற்கு உதயநிதி, திறக்கச் சொல்லுங்க, இந்த உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல என்று கூறினார். 

அரசியல் ஆசான் திருமா – உதயநிதி பேச்சு

தேர்தல் களத்தில் உடன் இணைந்து பணியாற்றியதற்காக விசிக சார்பில் திமுகவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக தரப்பிலிருந்து திருமாவளவனுக்கு முறையான நன்றியோ அங்கீகாரமோ வழங்கப்படவில்லை என்று விசிக துணைப் பொதுச் செயலாளரும், சமூகநீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு தெரிவித்தார். உடனே, திருமாவளவனை தனது “அரசியல் ஆசான்” என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டது கவனம் பெற்றது. இது திமுக–விசிக உறவு தொடர்பான அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

சர்கார் போஸ்டர்- புஸ்ஸி ஆனந்த் பேச்சு

நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாததின் போது, சர்க்கார் என்ற படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் இவர்கள் தான் திரும்ப ஆட்சிக்கு வந்து இருப்பார்கள் என அதிமுகவை நோக்கி பேசினார் புஸ்ஸி ஆனந்த். அந்த ஒரேயொரு பேனர் கிழித்த காரணத்தால்தான் இப்போ விட்டுட்டு உட்கார்ந்து இருக்கீங்க. அதை கிழிக்காமல் இருந்திருந்தால் நீங்க தானே அடுத்தாப்ல இருந்திருப்பீங்க. அந்த பேனரை கிழிச்ச காரணத்தால் தான் நீங்க இல்லை என்று பேசினார் புஸ்ஸி ஆனந்த்.

யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது....எச்சரித்த விஜய்.

சட்டம் ஒழுங்கு மீதான விவாதமும் அனல் பறந்தது. கொலை, பாலியல் குற்றங்கள், காவல் மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசை கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, முதலமைச்சர் இதற்கு தயார் செய்து பதிலளிக்கட்டும், ரீல்ஸ் கண்டெண்ட்காகவோ, சம்பந்தமே இல்லாமல் குட்டிக் கதையோ சொல்லாமல், திமுக மீது பழிப்போடாமல், ஒரு எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்ட கேள்விக்கு ஆளுங்கட்சியாக பதிலளித்தால் போதுமானது என்று உதயநிதி கூறினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்... “நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்ற பாணியில் பதிலடி கொடுத்தது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனே எழுந்த உதயநிதி,” "கடைசியாக யார் ஓடினார் என்பது எல்லாருக்குமே தெரியும். இப்படி சொல்லிவிட்டு அவையை விட்டு அவர் ஓடிவிட்டார்” என்று விஜய் குறித்து விமர்சித்தார். 

அந்த மூன்று கோப்புகள் என்னென்ன?

இந்த நிலையில் தான், செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற்ற விவாதம் அரசியல் களத்தையே அதிர வைத்தது. திமுகவின் கடந்த கால ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரங்களை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார். சர்க்காரியா ஆணையம்... வீராணம் திட்டம்... அமலாக்கத்துறை ஆவணங்கள்... என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த காலத்தை பேசாமல்... தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பதில் சொல்ல வேண்டும் என உதயநிதி தரப்பு வலியுறுத்தியது. விஜய்யின் பதிலுரைக்கு உதயநிதி பதிலளிக்க முயன்றபோது... அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவையில் அமளி... தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு... என சட்டப்பேரவை அரசியல் களமாக மாறியது.

மிசா விவகாரம்

இதோடு முடியவில்லை சர்ச்சை... மிசா காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த நிகழ்வுகள் குறித்தும் விஜய் பேசியது புதிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதோடு அவரது சைகையும், ஸ்டாலினை உருவக் கேலி செய்ததாக திமுக தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. விஜய்யின் பேச்சில் கூறப்பட்ட சில தகவல்கள் குறித்து திமுக தரப்பினர் கேள்வி எழுப்பினர். “ரியல் ஆட்சி... ரீல் அரசியல்” என திமுக தரப்பிலிருந்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

தனிப்பட்ட விமர்சனங்கள்

சட்டப்பேரவை விவாதங்களில் அரசியல் குற்றச்சாட்டுகளை தாண்டி... தனிப்பட்ட விமர்சனங்களும் பேசுபொருளாகின. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளுக்கு இடமில்லை என முதலமைச்சர் விஜய் தெரிவித்தது கவனம் பெற்றது. அவையில் பேசப்பட்ட சில கருத்துகள் பதிவிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் சமூக வலைதளங்களில் வைரலானது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

குதிரை பேரம் குற்றச்சாட்டு..

செப்டம்பர் 7-ம் தேதி... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான குற்றச்சாட்டும் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ.க்களை ஹோட்டலில் தங்க வைத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில்...அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று, இந்த குதிரை பேரம் திமுக நிர்வாகி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஓட்டலில் நடந்த்தாகவும் பகீர் கிளப்பினார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.

கேள்வி... பதில்... குற்றச்சாட்டு... பதிலடி... அமளி... வெளிநடப்பு.... ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அரசியல் அனல் பறந்தது. குறிப்பாக விஜய் - உதயநிதி மோதல்... சட்டப்பேரவை விவாதத்தை தாண்டி தமிழக அரசியல் களத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இங்கு மக்கள் பிரச்னையை தாண்டி, திமுக மீது தவெக பழிப்போடுவதும், தவெகவிற்கு பதிலடி கொடுப்பதில் திமுக கவனம் செலுத்தியதுமே முதன்மையாக இருந்த்தால், மக்களுக்கான கோரிக்கைகள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. 

இந்த கூட்டத்தொடர் முடிந்தாலும்... சட்டப்பேரவையில் நடந்த இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாகும் என்பதில் சந்தேகமில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow