’இதயம்’ கவர்ந்த முரளி..! என்றும் ரசிகர்களின் மனதில் வாழும் நாயகன்!

1984-ல் ‘பூவிலங்கு’ மூலம் அறிமுகமாகி, ‘இதயம்’, ‘புதுவசந்தம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் முரளியின் 16-வது நினைவு தினம் இன்று.

Sep 8, 2026 - 19:00
Sep 8, 2026 - 18:51
’இதயம்’ கவர்ந்த முரளி..! என்றும் ரசிகர்களின் மனதில் வாழும் நாயகன்!
Murali Actor

’இதயம்’ கவர்ந்த முரளி!

- வி.ராம்ஜி
எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருப்பவர்கள் மிகச்சிலர். அந்த ஹீரோ நடிகர்கள், இந்த ஹீரோ நடிகர்கள் என எல்லா ஹீரோ நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர்... முரளி. அவரின் நினைவுதினம் செப்டம்பர் 8ம் தேதி.
கன்னடத் திரையுலகில், சித்தலிங்கையா மிகப்பெரிய தயாரிப்பாளர். எண்ணற்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். தயாரித்து இயக்கியிருக்கிறார். சித்தலிங்கையா படம் என்றாலே, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். பின்னாளில், தன்னுடைய மகன், தமிழில் இந்த அளவுக்கு மிகப்பெரிய நடிகராக வருவார் என்றோ, ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகனாக வலம் வருவார் என்றோ  சித்தலிங்கையாவும் நினைக்கவில்லை. முரளியும் நினைக்கவில்லை.
84ம் ஆண்டு ‘பிரேம பர்வா’ என்ற கன்னடப்படத்தில் அறிமுகமானார் முரளி. அப்பாவின் தயாரிப்பு. அப்போது அவருக்கு வயது 20. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத்தந்தது. தமிழ் சினிமா வட்டத்திலும் இந்தப் படத்தின் பேச்சு பற்றிக்கொண்டது. அதேவருடத்தில், தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார் முரளி. கே.பாலசந்தரின் கவிதாலயாவின் துணை  கம்பெனியான , கைலாஷ் கம்பைன்ஸ் பேனரில் முரளி அறிமுகமானார், பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர்ஜானின் இயக்கத்தில் ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியானது.
முரட்டுத்தனமும் பிள்ளை குணமும் கொண்ட கல்லூரி இளைஞன் வேடம் முரளிக்கு மிக மிக அழகாகப் பொருந்திப்போனது. முதல் படத்தில் மட்டுமா... முக்கால்வாசி படங்களில், கல்லூரி இளைஞராக வலம் வந்தார் முரளி! சொல்லப்போனால், இந்தியத் திரையுலகில், முரளி அளவுக்கு காலேஜ் மாணவன் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்தவர் வேறு எவரும் இருக்கமுடியாது.
அனல் தெறிக்கும் வீரம், கனல் கொப்புளிக்கும் ஆவேசம், நரம்பு புடைக்கிற துடிப்பு, ஒன்றிப்போன ஏக்கம், உருகவைக்கும் துக்கம், ஒன்றவைக்கும் காதல், காதலிக்குக் கட்டுப்படுதல், அவலத்தை எதிர்த்தல் என்று முதல் படத்திலேயே ஸ்கோர் அடித்து முன்னேறினார். கருகருவென நிறமும் வெள்ளைவெளேரென கண்களும் ரொம்பவே ரசிகர்களை ஈர்த்தன. நடிகை குயிலிதான் முரளியின் முதல் நாயகி. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவும் தன் பங்கைச் செலுத்தினார்.
இன்னும் சொன்னால், இளையராஜாவின் பங்கு முதலிடம் பிடித்தது. ‘கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு’, ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’, ‘லவ் மீ லவ் மீ’, ‘போட்டேனே பூவிலங்கு’ என்று பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இதில் ‘ஆத்தாடி பாவாட காத்தாட’ , இன்றுவரை நம் மனதில் ஆடிக்கொண்டிருக்கிறது ஜில்லுப் பாட்டு; ஜொள்ளுப்பாட்டு!
முதல் படத்திலேயே இப்படியாக கவனம் ஈர்த்த முரளி, அதே 84ம் ஆண்டில், வரிசையாக படங்களில் நடித்தார். ’புதியவன்’ என்ற படத்தில் நடித்தார். இயக்குநர் மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் அற்புதமான கேரக்டரில் வெகு யதார்த்தமாக நடித்தார். இந்தப்படம்தான் முரளியை கேரக்டர் நடிகராகவும் கொண்டுசேர்த்தது.
கன்னடத்தில் ‘பல்லவி அனு பல்லவி’யெல்லாம் எடுத்திருந்த மணிரத்னம், தமிழில் முதன்முதலாக ‘பகல் நிலவு’ படத்தை இயக்கினார். சத்யராஜ், முரளி நடித்த இந்தப் படத்தில் இருவருமே நடிப்பில் அசத்தினார்கள். இளையராஜாவின் இசையில், எல்லாப் பாடல்களும் காவியம் படைத்தன. பெற்றன. ‘பூமாலையே இரு தோள்சேருதோ’ உள்ளிட்ட பாடல்கள் இன்றைக்கும் முக்கால்வாசி பேரின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆவேசமான அடங்காத வீரன் என்றாலும் முரளி. அழுதுகொண்டே கூச்சசுபாவத்தைக் காட்டுவதற்கும் முரளி என்றாகிப்போனது!
85ம் ஆண்டிலேயே ‘புதிர்’ படத்தில், இரட்டை வேடத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நிலையான இடம் கிடைத்தது முரளிக்கு. முரளியா... சம்பளக் கெடுபிடி செய்யமாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். முரளியா... எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடித்துக் கொடுப்பார் என்று இயக்குநர்கள் சொன்னார்கள். முரளியின் படங்கள்... முதலுக்கு மோசம் செய்யாது என்று விநியோகஸ்தர்கள் மகிழ்ந்தார்கள்.
எண்பதுகளில், சுமாரான படம் என்றாலே நாற்பது நாள், ஐம்பது நாள் ஓடிவிடும். கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், மோகன் என்று பல நடிகர்கள் தங்களுக்கென ஒரு மார்க்கெட் வேல்யூ வைத்திருந்தார்கள். அப்படியொரு மார்க்கெட் வேல்யூ முரளிக்கும் இருந்தது. இளையராஜாவின் சொந்தப் படமான ‘கீதாஞ்சலி’ படத்தை கே.ரங்கராஜ் இயக்கினார். இதில் முரளி நாயகன். இந்தப் படத்தில் முரளிக்கான பாடல்களையெல்லாம் இளையராஜாவே தன் குரலில் பாடினார். அப்போதெல்லாம் முரளிக்கு எஸ்.பி.பி. குரலும் செட்டாகும், இளையராஜாவின் குரலும் செட்டாகும் என்று நாங்கள் பேசிக்கொள்வோம்.
கவிதாலயாவின் ‘வண்ணக்கனவுகள்’ படம் கார்த்திக்கிற்கும் முரளிக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இருவருமே நடிப்பில் அசத்தினார்கள். பாடல்கள் இல்லாமல் வந்த இந்தப் படம், முரளியின் திரைவாழ்வில் மிக முக்கியப் பங்கு வகித்தது. முக்தா பிலிம்ஸின் ‘ஒரு மலரின் பயணம்’, மனோஜ்குமார் இயக்கத்தில் ‘மண்ணுக்குள் வைரம்’ என்று வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன. இந்தசமயத்தில்தான் 89ம் ஆண்டு, மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த படமாக வந்தது ‘புதுவசந்தம்’.
இயக்குநர் விக்ரமனின் முதல் படமான ‘புதுவசந்தம்’, சூப்பர் குட் பிலிம்ஸின் ‘புதுவசந்தம்’ முரளியின் வாழ்விலும் வசந்தமென வீசியது. இந்தக் காலத்தில் முரளிக்கு மைக் கொடுத்து மேடையேற்றி, பாட்டுப்பாடுவது போல் காட்சிகள் வைத்தார்கள் இயக்குநர்கள். ஒருகாலத்தில் என்னிடம் மைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். பிறகு என் கையில் இருந்த மைக்கைப் பிடுங்கி, மோகனிடம் கொடுத்தார்கள்’ என்று கமல் ஒருமேடையில் சொன்னார். மோகனிடம் இருந்த மைக், முரளிக்கும் பகிர்ந்து பகிர்ந்து தரப்பட்டது.
கார்வண்ணன் டைரக்‌ஷனில் ‘பாலம்’, ‘புதிய காற்று’, அடுத்து ‘நானும் இந்த ஊருதான்’, ’நம்ம ஊரு பூவாத்தா’,’சாமி போட்ட முடிச்சு’, ‘சின்னப்பசங்க நாங்க’ என்று நூறு நாள், இருநூறு படங்களாக முரளிக்கு அமைந்தன.’பூவிலங்கு’ படத்தில் இருந்து தொடங்கிய முரளியின் சினிமா வாழ்க்கை, அடுத்தடுத்து உச்சம் தொட்டுக்கொண்டே இருந்தது. வளர்ச்சியை நோக்கி ஆரவாரமே இல்லாமல் பயணித்தார்.

91ம் ஆண்டு, சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில், கதிர் இயக்கத்தில், இளையராஜா இசையில் ‘இதயம்’ வெளியானது. எல்லார் இதயங்களிலும் தனியிடம் பிடித்தார் முரளி. காதலைச் சொல்லாமல் தவித்த கேரக்டர் என்று அதுவரை ‘ஒருதலைராகம்’ சொல்லப்பட்டு வந்தது. ஆனால் காதலைச் சொல்லமுடியாத ஏக்கத்தை, துக்கத்தை, வலியை, வேதனையை, இயலாமையை தன் முகபாவங்களில் அழகாக வெளிப்படுத்தினார்.
மிக ஆழமாக தன் குரலின் வழியே நமக்குக் கடத்தினார். முரளியின் குரலில் ஒரு மென்சோகம் இழையோடிக்கொண்டே இருக்கும் இழையோடிக்கொண்டே இருக்கிறது என ‘இதயம்’ படத்தை, திருச்சி மாரீஸ் தியேட்டரில் எட்டாவது முறை பார்த்துவிட்டு வந்து சொல்லிக்கொண்டே இருந்தேன் நண்பர்களிடம்! ’இதயம்’ கதாபாத்திரத்தை, முரளியைத் தவிர வேறு எவரும் இத்தனை இயல்பாகவும் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் செய்திருக்கவே முடியாது என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது. வெள்ளிவிழாப் படமாக அமைந்தது.  பிறகு வெள்ளிவிழாப் படங்கள் என்று வரிசையாக அமைந்தன.
‘பொட்டுவைத்த ஒரு வட்டநிலா’வையும் ‘ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ பாடலையும் ‘இது முதன்முதலா வரும் பாட்டு’ என்ற பாடலையும் முரளியின் முகபாவங்களையும் யாரால்தான் மறக்கமுடியும். அதிலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில், வடிவேலுவுடன் சேர்ந்து முரளி அடித்த லூட்டியையும் இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பை அடக்கமுடியாது.
சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படமென்றாலே முரளி இருப்பார். ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ உள்ளிட்ட படங்களெல்லாம் ஹிட். சேரனின் ‘பொற்காலம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ’வாட்டாக்குடி இரணியன்’, ‘அதர்மம்’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்’ என எண்ணற்ற படங்கள், முரளியின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தின.
‘பூவிலங்கு’ படத்தில் அறிமுகமான அந்த முரளியை, மகன் அதர்வா வடிவில் இன்றைக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். முரளியுடன் வெறிகொண்ட ரசிகர் ஒருவர், கடைக்கோடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருவார். முக்கியமான பல ஏரியாக்களில், ‘கடவுள் முரளி வாழ்க’ என்று கரித்துண்டால் எழுதிவிட்டுச் செல்வார். ‘யாருய்யா இது?’ என்று பத்திரிகைகள் படம் பிடித்து எழுதின.
ஒருகட்டத்தில், அந்த ரசிகரைப் பார்க்கும் ஆவல் முரளிக்கு வந்துவிட, எப்படியோ கண்டுபிடித்து, முரளியின் முன்னே நிறுத்தினார்கள். வயிறு நிறைய உணவளித்து, ஊர், பெயர் விவரங்களையெல்லாம் கேட்டுத்தெரிந்துகொண்டு, ‘என் மேல நீ வைச்சிருக்கிற அன்புக்கு நன்றி. ஆனா, இப்படி செலவு பண்ணிட்டு, சென்னைக்கு வரக்கூடாது. செவுத்துல கடவுள்னு என்னை எழுதாதே’ என அறிவுரை சொல்லி அனுப்பி, பணமும் கொடுத்து அனுப்பி வைத்த ரசிகர், முரளி மீது அன்புவைத்திருக்கும் எளிய ரசிகர்களின் உதாரணம்!
செப்டம்பர்  8ம் தேதி, 2010ம் ஆண்டு, முரளி மறைந்தார். என்றும் 16 போல் வலம் வந்த முரளி மறைந்து 16 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் எண்பதுகளின் ரசிகர்பட்டாளம், முரளியைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறது. கொண்டாடிக்கொண்டே இருக்கும்! முரளி நடித்த படங்களில், உங்களுக்குப் பிடித்த படங்களைச் சொல்லுங்களேன். இதயம் முரளியை நினைவுகூர்வோம். அது அதர்வாவுக்கு இன்னும் இன்னுமான எனர்ஜியைக் கூட தரலாம்தானே..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow