கமல் – சுஜாதா கூட்டணியின் அசத்தல் சம்பவம்.. ‘விக்ரம்’ உருவான கதை!
கமல்ஹாசன்–சுஜாதா கூட்டணியில் 1986-ல் உருவான ‘விக்ரம்’, தொழில்நுட்பம், கதை சொல்லல், கணினி, இசை என பல்வேறு புதுமைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய முன்னோடிப் படமாக அமைந்தது.
கமல், சுஜாதா, குமுதம்!
’விக்ரம்’ செய்த புதுமைப்புரட்சி!
-வி.ராம்ஜி
தமிழ் சினிமாவில் இன்றைக்கும் பல புதுமைகளைப் புகுத்தி, தனக்குத்தானே பரிட்சை வைத்து பார்த்துக்கொள்பவர்களில் கமல்ஹாசன் தனித்துவமானவர். அதேபோல் ‘இப்படித்தான் என் எழுத்து’ எனும் வரையறைகளை உடைத்து உடைத்து, எல்லா வகையிலும் எழுதி, தன் குறும்புகளையும் விஞ்ஞான மெய்ஞ்ஞான அறிவுகளையும் கொடுத்துக்கொண்டே இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா.
கமலும் சுஜாதாவும் ‘இந்தியன்’ முதலான இணைந்தார்கள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பே இருவரும் இணைந்து,தமிழ் சினிமாவில் அதகளம் பண்ணினார்கள். கூடவே குமுதத்தையும் துணைக்கு பலமாக சேர்த்துக்கொண்டார்கள் என்பது தெரியுமா?
இன்றைக்கு சொந்தவீடு இல்லாதவர்கள் கூட உண்டு.
ஆனால் சொந்தமாக கம்ப்யூட்டரும் லேப்டாப்பும் இல்லாதவர்கள் உலக அதிசயப் பட்டியலில்தான் உண்டு. 1986ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் வந்த திரைப்படம். சொல்லப்போனால், RKFI பேனரில் வந்த முதல்படம் இதுவே! கமல் இதற்கு முன்பே தயாரித்திருந்தாலும் ‘ராஜ்பார்வை’ முதலான படங்கள் ஹாசன் புரொடக்ஷன்ஸ் எனும் பேனரில் வந்தன!
கமல், அம்பிகா, டிம்பிள், அம்ஜத்கான், ஜனகராஜ், சத்யராஜ், மனோரமா என பலரும் நடித்த இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அதில் காட்டப்பட்ட கம்ப்யூட்டர் என்ன என்பதை லைப்ரரிக்குச் சென்று புத்தகங்களைத் தேடி என் மண்டையில் அப்போது ஏறவில்லை. ஒரு சாதாரண உளவுப்படை அதிரடிப் படமாக தெரியலாம். ஆனால் அன்றைய தமிழ் சினிமா சூழலில் கமல்ஹாசன் எடுத்த மிகப்பெரிய தயாரிப்பு ரிஸ்க் ரஸ்க் இது. சுஜாதாவின் கதை.
கமல், சுஜாதா இருவரும் இணைந்து எழுதிய திரைக்கதை. இளையராஜா, ஒளிப்பதிவாளர் ரங்கா, இயக்குநர் ராஜசேகர் என பலரின் உழைப்பும் வியர்வையும் ‘விக்ரம்’ படைப்புக்குள் விதையாக இருக்கின்றன. அதிநவீன ஏவுகணை அதாவது ராக்கெட். அந்த அக்னி புத்ரா ராக்கெட் கடத்தல்,, ரா உளவுப்பிரிவு அதிகாரி, கம்ப்யூட்டர் நிபுணர், கற்பனையான சலாமியா எனும் நாடு, அதில் கமலும் சுஜாதாவும் குசும்பு பண்ணிய சலாமிய மொழி என ஆங்கிலப்படங்களுக்கு இணையாக ஒவ்வொருகாட்சியும் எடுக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தை எடுக்க கமல் துணிந்தார். ‘படத்தை தயாரிக்க ஏன் துணிச்சல்?’ எனும் கேள்வி வரலாம். அப்போது இந்தப் படத்தின் பட்ஜெட் ஒருகோடி ரூபாய். ‘கமலின் ஒருகோடி ரூபாய்க்கனவு’ என்று புத்தகமே ‘விக்ரம்’ படம் பற்றிய விளக்கக்கையேடாக விற்பனைக்கு வந்தது. அதுமட்டுமா? ‘குமுதம்’ பத்திரிகையில் படம் வருவதற்கு முன்பாக, ‘விக்ரம்’ கதையை ஒரு தொடராக எழுதினார் சுஜாதா. வாராவாரம் ஆரவாரம் எழுப்பி, படத்துக்கான எதிர்ப்பார்ப்பை ‘தொடரும்’ போட்டு ‘வைப்’ ஏற்றினார் சுஜாதா. தொடரைப் படித்துவந்த வாசகர்கள் ரசிகர்களானார்கள். ரசிகர்கள் வாசகர்களானார்கள்.
இப்படியாக, பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் ’விக்ரம்’ தொடரை தடக்கென்று பாதியிலேயே நிறுத்திவிட்டார் சுஜாதா.வாசகர்கள் இன்றைய கம்ப்யூட்டர் மூளையை அன்றைக்கு கசக்கிப் பிழிந்துகொண்டு யோசித்தார்கள். அப்படி யோசித்தவர்களில் ஒருசிலர், இன்றைக்கு இயக்குநர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். சுஜாதாவும் கமலும் இணைந்து தமிழ் சினிமாவுக்கு வழங்கிய கொடைகளில், ‘விக்ரம்’ படமும் ஒன்று!
ஒருகோடி ரூபாயில் கமல் எடுத்த ரிஸ்க் எப்படிப்பட்டது? அன்றைய தேதிக்கு கமலின் மொத்த சொத்தையும் கடந்து கடனும் வாங்கி எடுக்கப்பட்ட கனவுப்படம். ‘விக்ரம்’ அங்கே சாத்தியமாயிற்று. ‘மருதநாயகம்’ சாத்தியமாக இதேபோல் கமலுக்கு பத்துப்பதினைந்து படங்கள் தேவைப்பட்டன. அதாவது நவீனத்தை கமல்ஹாசனால் எடுக்க முடிந்தது. சரித்திரக் காலத்தை உலகநாயகனால், ‘மருதநாயகம்’ படத்தில் சொல்ல, பணமில்லை! இல்லாத ஒரு நாடு உருவாக்கப்பட்டது.
‘சலாமியா’ என்ற கற்பனை ராஜ்ஜியம் பிறந்த கதை இது. கூடவே சலாமிய மொழியையும் கமலே உருவாக்கினார். அந்த நாட்டின் பாலைவனக் காட்சிகளுக்காக ராஜஸ்தான், சலாமியாவாக மாறியது. ஜெய்சால்மர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. சலாமியாவின் உலகத்தை பெரியதாக காட்ட 125 ஒட்டகங்களும் 65 குதிரைகளும் பயன்படுத்தப்பட்டதாக மறைந்த இயக்குநர் ராஜசேகர், பிரமிப்பு மாறாமல் தெரிவித்திருக்கிறார்.
‘ஷோலேஅம்ஜத் கான் சலாமியாவின் சுல்தானானார். இளவரசியாக டிம்பிள் கபாடியா. இவர்கள் இருவரையும் தமிழுக்கு அழைத்து வந்தார் கமல். மலையாள நடிகை லிஸிக்கும் தமிழில் அறிமுகப்படம். கமலின் சகோதரர் சாருஹாசன் உளவுத்துறை தலைவராக நடித்தார்; அந்த கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ‘M’ போன்ற வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்பத்திலும் ‘விக்ரம்’ இன்னொரு வரலாற்றை உருவாக்கியது. இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் இசைத்தொகுப்பு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்பட இசைத்தொகுப்பு என்பது ராஜா செய்த வரலாறு. ராஜ வரலாறு. ‘விக்ரம் விக்ரம்’, ‘வனிதாமணி’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘மீண்டும் மீண்டும் வா’ என பாடல்களில் எலக்ட்ரானிக் ஒலிகளையும் அப்போது புதிதாக இருந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தினார் இளையராஜா.
படத்தில் கம்ப்யூட்டர் நிபுணராகவே லிஸி நடித்திருந்த நிலையில், திரைக்கதையிலும் இசை தயாரிப்பிலும் கணினி என்ற வார்த்தை அன்றைய தமிழ் ரசிகர்களுக்கு புதிய உலகமாக இருந்தது. எஸ். எம்.அன்வர் எனும் இந்திய அளவில் சிறப்பான ஒளிப்பதிவாளர். ‘ஷோலே’ படத்துக்கும் பின்னர் கமல் எடுத்த ‘சத்யா’ படத்துக்கும் இவர்தான் கேமராமேன். ‘விக்ரம்’ படத்தின் சிறப்பு ஒளிப்பதிவு மற்றும் எஃபெக்ட்ஸ்க்காக கமல் பயன்படுத்தினார்.
இவ்வளவு முயற்சி எடுத்தபோதும் படம் குறித்து கமலுக்கே பின்னாளில் சில அதிருப்திகள் இருந்தன. சுஜாதாவுடன் சேர்ந்து தாங்கள் நினைத்திருந்த ‘விக்ரம்’ திரையில் முழுமையாக வரவில்லை என்று கமல் வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். சினிமாக்கதையை பத்திரிகையில் தொடராக ஆரம்பித்து... கிளைமாக்ஸுக்கு முன்பே நிறுத்தி ரசிகர்களை திரையரங்குக்கு அழைத்த சுஜாதாவின் எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் செய்த புதுமைகள் எல்லாமே புரட்சிதான்! கமலின் படத்தை ரிலீஸ் நாளில் பார்க்கலாம்; ஆனால் அதைப் புரிந்துகொள்ள நமக்கு பத்துவருடங்களாகும்.
ஏனென்றால் 86ம் ஆண்டு கமல் ‘விக்ரம்’ எடுத்தப்போது அது 96ம் ஆண்டுக்கு பிறகு வரவேண்டிய படம் என்று சொல்லப்பட்டது. கமலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க தமிழ் சினிமாவாலேயே இயலாது என்கிறபோது, ரசிகர்கள் எம்மாத்திரம்?
What's Your Reaction?