பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே காங். செயல்பட்டது... உ.பியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

எங்களுக்கு வாரிசுகள் இல்லாததால்தான் உங்கள் வாரிசுகளுக்கு நாங்கள் உழைக்கிறோம் என்று உணர்ச்சிவசமாக பேசினார். 

May 5, 2024 - 20:52
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே காங். செயல்பட்டது... உ.பியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் தௌராஹ்ராவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் வழங்க அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டினார். மேலும் அவ்வாறு செய்யாத அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்றும் கூறினார். 2014-க்கு முன்பு நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்றார். பல நகரங்களில் பயங்கரவாதிகள் சிலீப்பர் செல்களாக இருந்தனர் என்றும் அவர் கூறினார். இஸ்லாமியர் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் சமாதான அரசியலை முன்வைக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள் என்று மோடி பேசினார். 

சமாஜ்வாடி கட்சியும், காங்கிரஸும் இஸ்லாமியர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகிறது என்பது அவர்களுக்கும் தெரிந்து விட்டது என்று பேசிய மோடி, இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இஸ்லாமியர்களும் பாஜகவின் பின் நிற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். தன்னையும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, எங்களுக்கு வாரிசுகள் இல்லாததால்தான் உங்கள் வாரிசுகளுக்கு நாங்கள் உழைக்கிறோம் என்று உணர்ச்சிவசமாக பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow