தவெக மாநாட்டின் தீர்மானங்கள்: மேடையில் முழுமையாக பேசாத விஜய்.. அறிக்கையாக வெளியீடு!

விஜய் தலைமையில் மதுரை பாரப்பத்தியில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவெக மாநாட்டின் தீர்மானங்கள்: மேடையில் முழுமையாக பேசாத விஜய்.. அறிக்கையாக வெளியீடு!
tvk madurai maanadu adopts 6 key resolutions including special law against honor killings

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்றது.

மாநாட்டு மேடைக்கு வருகைத்தந்த விஜய்யினை கட்டித்தழுவி முத்தம் கொடுத்து தன் அன்பினை பொழிந்தார்கள் அவரது பெற்றோர்கள். கட்சியின் நிர்வாகிகளுக்கு கைக்கொடுத்து விட்டு ரேம்ப் வாக்கில், தவெகவின் புதிய கொள்கை பாடலுடன் நடக்கத் தொடங்கினார் விஜய். தடைகளை மீறி, ரேம்ப் வாக்கில் தொண்டர்கள் ஏறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விஜய்யின் பாதுகாவலர்கள் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.

மதுரை, பாரபத்தி பகுதியில் நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும் போது திமுகவினையும், பாஜகவினையும் கடுமையாக தாக்கி பேசினார்.

மாநாட்டில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பரந்தூர், மீனவர்கள் பிரச்சினையினை ஒருவரியில் பேசிவிட்டு ஆணவக்கொலை, வாக்குத்திருட்டு தொடர்பாக எந்த கருத்தையும் விஜய் மேடையில் பேசவில்லை. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விஜய் மேடையில் முழுமையாக பேசவில்லை என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தீர்மானங்கள் குறித்த முழு விவரங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு

தீர்மானம் 1: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது .இதில் பெரும்பான்மையான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமானவை. முப்போகமும் விளையக்கூடியவை. தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதை தடுக்க, வருடக்கணக்கில் போராடி வரும் எளிய மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாய் அவர்களின் நிலங்களைப் பறிக்கவும் பலவழிகளிலும் தொடர்ந்து தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்துவருகிறது

மேலும், அரசு கையகப்படுத்த முயலும் நிலப்பரப்பில் 13 வற்றா நீர்நிலைகள் உள்ளன. விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும். சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் இந்த நீர்நிலைகளே உள்ளன. இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு.இங்குள்ள நீர் தேங்கும் பகுதிகள் சிதைக்கப்பட்டால் பருவமழைக் காலங்களில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதற்குப் பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்யவேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகள் இதில் தவறும்பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும். அதோடு எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கும் எந்த அரசும் அதே எளிய மக்களால் ஆட்சி,அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பதையும் இந்த தீர்மானத்தின் வழியே எச்சரிக்கையாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 2: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 8.3 சதவீதமாகும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலில் இவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லையா? இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியிருப்பது ஜனநாயக விரோதமில்லையா? என்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள் என எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. 

இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், மீனவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் எப்போதும் அரசியல் ஆதாயமாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால் தமிழக வெற்றிக் கழகம், எப்போதும் உண்மையான மீனவ நண்பனாக அவர்களுடன் நிற்கும்.

நம் நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால் கடலில் தத்தளிக்கும் படகு போலவே தமிழக மீனவர்களின் வாழ்வும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்வதைத் தடுக்க, அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, மீன்பிடி தொழிலையும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க. தமிழக வெற்றிக் கழகம் ஏற்கெனவே கூறியது போல கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களின் படகுகளை இலங்கை அரசுத் திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4; ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவச் சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம், இன்றைய திறனற்ற ஆட்சியாளர்களால் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது. சாமானிய மனிதர்கள் சராசரி வாழ்க்கை நடத்தக்கூட அஞ்ச வேண்டிய சூழல், தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டமியற்றித் தடுக்கத் தவறிய வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. எப்படிச் சமூக நீதி அரசாகும்? ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம்

தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் முதல் காவலர் படுகொலைகள் வரை பல்வேறு காரணங்களுக்காக, சர்வ சாதாரணமாகக் கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவங்கள். மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதனால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இளைய சமுதாயம் பாதுகாப்பற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல். பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 6: அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

அரசுப் பணியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்து வரும் சூழல், தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்நிலையில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. 

இந்த நடவடிக்கையால், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர்கள், மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான நேரடிப் பணியிடங்கள் பெருமளவு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே தகர்த்துவிடும் பேராபத்து ஆகும். எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், TNPSC உள்ளிட்டத் தேர்வு வாரியங்கள் வாயிலாகத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மையான முறையில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமிழக வெற்றிக் கழகத்தின் இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow