சிங்கம், புலி பார்க்க போற குட்டீஸ்களுக்கு குட் நியூஸ்.. வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்கிழமை நோ லீவு

Apr 29, 2024 - 15:26
சிங்கம், புலி பார்க்க போற குட்டீஸ்களுக்கு குட் நியூஸ்.. வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்கிழமை நோ லீவு

கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஏப்ரல் 30) செவ்வாய்கிழமை செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் முக்கிய சுற்றுலா தளமாக அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது.  இங்கு வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான  சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து  விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.  தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகளவு சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தருகின்றனர். இந்தப் பூங்காவில் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விடுவது வழக்கம். 

இந்த நிலையில், கோடை விடுறையை முன்னிட்டு, நாளைய தினம் ( ஏப்ரல் 30) செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை இல்லாமல் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow