இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது; ஆனால் இது கொடூரமானது - நடிகர் ராமராஜன் வேதனை

கொரோனா கொத்துக் கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல், இந்த கள்ளச்சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. 

Jun 21, 2024 - 19:40
Jun 21, 2024 - 19:45
இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது; ஆனால் இது கொடூரமானது - நடிகர் ராமராஜன் வேதனை

இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டிச் செல்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ராமராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பெறும் 16 பேரில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தவிர மற்ற மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை 7 நபர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து நடிகர் ராமராஜன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐம்பது மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. துயரத்தில் பங்கெடுக்கும்.

இங்கு ஐம்பது வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால். கொரோனா கொத்துக் கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல், இந்த கள்ளச்சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. 

இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டிச் செல்கிறது. மனிதர்களைக் குடி எப்படிக் கொல்கிறது என்பது நிகழ்காலப் பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது பல குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. சிதைக்கு அனுப்புகிறது. 

இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? போதைப் பொருள் கலாச்சாரமா? தெரியவில்லை. அவர்கள் நன்றாக ஆரோக்கியத்துடன் குடும்பங்களை உருவாக்க வேண்டியவர்கள் என்பதை எப்போது உணர்ந்துகொள்ள வைக்கப் போகிறோம்? ஒரு படத்தின் ஆரம்பத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு நம் சமூக அக்கறை முடிந்து போகிறதா? குடியால் நாம் இழந்தவர்கள் அதிகம்.

அதுவும் இந்த கள்ளச் சாராய சாவுகள் இழப்பின் உச்சம். இதுக்கு காரணமானவர்கள் 50 பேரின் கொலையாளிகளாக தீர்க்கப்பட வேண்டும். நீதி தனது கடமையை செய்யும் என எப்போதும் நம்புபவன் நான். நிச்சயம் சட்ட வரைமுறைகள் அவர்களைத் தண்டிக்கட்டும்.

அரசு விரைந்து விசச் சாராய மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மனிதம் மிக உயர்ந்தது. அதைவிட நம்மை நாமாக வைத்துக் கொள்வது வேறெதுவுமில்லை. மனிதம் காப்போம். மரணம் தவிர்ப்போம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow