விழுப்புரம் திமுக பஞ்சாயத்து: விளம்பர அரசியலில் மஸ்தான்.. கடுப்பில் எம்.ஆர்.கே!

'விழுப்புரம் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் விளம்பர அரசியலில் தான் ஈடுபடுகிறார்’ என அப்பகுதி திமுக நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் திமுக பஞ்சாயத்து: விளம்பர அரசியலில் மஸ்தான்.. கடுப்பில் எம்.ஆர்.கே!
viluppuram dmk faces rift over gingee masthan influence

2026 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளைக் கைப்பற்றினோம். ஆனால், 2021 தேர்தலில் செஞ்சியில் மட்டுமே வென்றோம். மற்ற இரண்டு தொகுதிகளின் இழப்புக்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்தான் காரணம்'என லோக்கல் உடன் பிறப்புக்கள் ஓப்பனாக கொந்தளித்த விவகாரம்தான் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மண்டலச் செயலாளர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது!

இதுகுறித்து விழுப்புரம் தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த நிர்வாகி நம்மிடம் "திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலை மனதில் வைத்து மண்டலச் செயலாளர்களை நியமித்திருக்கிறார். இதனால், ஒவ்வொரு மண்டலச் செயலாளர்களும் தங்கள் பொறுப்பு மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். அவ்வகையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார், அப்பகுதியில் இருந்த சில கோஷ்டி பூசல்களையும் கண்டித்து சரிசெய்தார்.

ஆனால், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திலோ நிலைமை வேறு. கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த பன்னீரிடம், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, 2016ல் மயிலம் தொகுதியில் நான் வெற்றி பெற்றேன். ஆனால், 2021 தேர்தலில் சொந்தக் கட்சி நிர்வாகிகளே என்னை தோற்கடித்தார்கள். இதனை அப்போது தலைமையிடமும் கூறியிருந்தேன். ஆனால், அப்போது யார் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நீங்களாவது நடவடிக்கை எடுங்கள்' என்று புகார் அளித்தார்.

அதேபோல், மாவட்டத்திலுள்ள மற்ற நிர்வாகிகளும், 'விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் விளம்பர அரசியலில் தான் ஈடுபடுகிறார். 2016ம் ஆண்டு மயிலம், திண்டிவனம், செஞ்சி என மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் திமுக வெற்றி பெற்றதற்கு நான்தான் காரணம் என அப்போது தம்பட்டம் அடித்தார். 

ஆனால் 2021 தேர்தலில் அவர் ஒருவர் மட்டுமே செஞ்சியில் வென்றபோது, கட்சியினர் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று மற்றவர்கள் மீது பழியைப் போட்டார். மயிலம் தொகுதியில் டாக்டர் மாசிலாமணி வெற்றி பெற்றுவிட்டால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்று அவரை தோற்கடித்தது மஸ்தான் தான்.

கள்ளச்சாராய விற்பனையில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறைக்குப் போன மருவூர் ராஜாவை கட்சியில் சேர்த்ததும் மஸ்தான் தான். அப்போதே இதை எதிர்கட்சிகள் பகிரங்க குற்றச்சாட்டாக முன்வைத்தனர். வரும் தேர்தல் பிரசாரத்திலும் இது எதிரொலிக்கும். இதற்கெல்லாம் பதில் கூற முடியாமல் மூன்று தொகுதிகளையும் பறிக்கொடுக்கப்போகிறோம்’ என அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். இந்த விஷயத்தை அமைச்சரும் கட்சியின் தலைமைக்கு கொண்டு போகவே, மஸ்தானை அழைத்து தலைமை கண்டித்துள்ளது” என்றார்.

இதுகுறித்து விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தானிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. குறுந்தகவலுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.

அப்போ யெஸ்தானா யெஸ்தானா?

(கட்டுரையாளர்: பி.கோவிந்தராஜு / குமுதம் ரிப்போர்ட்டர் / 22.08.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow