நடிகர் சங்கத்தில் விநாயகர் சதுர்த்தி.. நடிகர் கார்த்திக்கு பரிவட்டம் - விஷால் வரலையே ஏன்?
சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட்டது. நடிகர் கார்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரசாதம் வாங்க மறுத்ததாக சர்ச்சை எழுந்தது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த கொண்டாட்டத்தில் நடிகர் கார்த்திக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அதன்பிறகு அவர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, தியாகராயர் நகரில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் வித்யா கணபதி கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகப் பெருமானுக்கு காலை சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது.
தமிழ் நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 157வது பிறந்த நாளில் அவரது திருவுருவ படத்திற்கு, கார்த்தி, பூச்சி முருகன் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பூஜையின் போது நடிகர் கார்த்திக்கிற்கும் அவருடன் இருந்த பிற நிர்வாகிகளுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது. நடிகர் கார்த்தி உள்பட அவருடன் இருந்த நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அர்ச்சகர் வழங்கிய பிரசாதத்தை நடிகர் கார்த்தி வாங்க மறுப்பது போல வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. விநாயகர் சிலை அருகே படையல் போடப்பட்ட பிரசாதத்தை அர்ச்சகர் எடுத்து நடிகர் கார்த்திக்கிற்கு வழங்குகிறார். அதனை கார்த்தி வாங்காமல் மற்றவர்களுக்கு கொடுங்கள் என சைகை காட்டுகிறார் கார்த்தி. இதனைப் பார்த்தவர்கள் கார்த்தி பிரசாதத்தை வாங்க மறுப்பதாக கூறி விமர்சித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் விழாவின் போது பூஜைக்கு பிறகு முதலில் பாயாசம் மாதிரியான ஒரு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை கார்த்தி வாங்கி சாப்பிட்டார். அதன்பிறகு பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் கொடுத்ததைத்தான் கார்த்தி வாங்காமல் மற்றவர்களுக்கு வழங்கும்படி கூறினார். அதன்பிறகு தேங்காய், பழம் வழங்கப்பட்டது. அதனை கார்த்தி மறுக்காமல் வாங்கி கொண்டார். இன்றைய தினம் நடைபெற்ற விழாவில் நடிகர் சங்கத்தலைவர் நாசரும், செயலாளர் விஷாலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை (செப்டம்பர் 8) சென்னையில் நடைபெற உள்ளது. கேரளாவில் நடிகைகள் மீதான பாலியல் புகார் எதிரொலித்துள்ள இந்த நேரத்தில் தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் நாளை நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?