“பிரபாஸ் ஒரு ஜோக்கர்” - அர்ஷத் வர்சியை வறுத்தெடுத்த திரைப்பிரபலங்கள்

“பிரபாஸ் ஒரு ஜோக்கர்” குறித்த பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்சியின் கருத்துக்கு திரைப்பிரபலங்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Aug 22, 2024 - 15:42
“பிரபாஸ் ஒரு ஜோக்கர்” - அர்ஷத் வர்சியை வறுத்தெடுத்த திரைப்பிரபலங்கள்
அர்ஷத் வர்சியை வறுத்தெடுத்த திரைப்பிரபலங்கள்

நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கல்கி. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. பிரபாஸுடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.   

அதேபோல், ராஜமெளலி, துல்கர் சல்மான் உட்பட சிலர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். பான் இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான கல்கி படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மகாபாரதத்தை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தின் மேக்கிங், கிராபிக்ஸ் ஆகியவை ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறியிருந்தனர். இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் கல்கியின் மேக்கிங் ஒரு புதிய முயற்சி எனவும், இது இந்திய சினிமாவுக்கு நல்ல தொடக்கம் என்றும் விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அர்ஷத் வர்சியிடம், கல்கி திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரபாஸ் இந்த படத்தில் ‘ஜோக்கர்’ போல் இருக்கிறார். அவர் இன்னும் சிறப்பாகவே நடித்திருக்கலாம். மேட் மேக்ஸ் படம் போல் நான் எதிர்பார்த்தேன் ஆனால் இப்படம் என்னை ஏமாற்றிவிட்டது” என தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்தை கேட்டு திரைப்பிரபலங்கள் கொந்தளித்துள்ளனர். 

இவரது இந்த கருத்திற்கு பதிலளித்திருந்த நடிகர் நானி, “பிரபாஸ் பற்றி பேசி அர்ஷத் வர்சி விளம்பரம் தேடிக் கொண்டுள்ளார்” என தெரிவித்திருந்தார். இதேபோல் RX 100 திரைப்பட இயக்குநர் அஜய் பூபதி, “சினிமாவிற்காகவும் மக்களை மகிழ்விப்பதற்காகவும் எந்த எல்லைக்கும் போகக்கூடியவர் நடிகர் பிரபாஸ். அவர் சினிமாவிற்கும் நமது நாட்டிற்கும் கிடைத்த பெருமை. பிரபாஸ் மீது அர்ஷத் வர்சிக்கு பொறாமை இருப்பது பச்சையாகத் தெரிகிறது” என பதிலடி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க: அமேசான் பிரைமில் வெளியாகும் டாப் திரைப்படங்கள்

மேலும் அர்ஷத் வர்சியின் கருத்தைக் கேட்டு கோபமடைந்த தெலுங்கு நடிகர் சுதீர் பாபு, “ஒருவர் குறித்து கருத்துகள் தெரிவிப்பது தவறில்லை ஆனால் தவறாகப் பேசுவது மிகப்பெரிய தவறு. பிரபாஸின் பெருமைக்கு முன்னால் இதுபோன்ற சிறியவர்களின் வாய்களில் இருந்து வரும் வார்த்தைகள் தூசுக்கு சமம்” என தெரிவித்துள்ளார். 

கல்கி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 22) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இந்தி வெர்ஷன் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 20ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow