நடிகர் சங்கம் இனி அமைதியாக இருக்காது.. பாலியல் புகார்கள் குறித்து உறுதி
பாலியல் புகார்கள் தொடர்பாக இனி நடிகர் சங்கம் அமைதியாக இருக்காது என்றும் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக இன்னும் தீவிரமாக இருப்போம் என்றும் நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, கருணாஸ் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், புதிய கட்டடத்துக்காக ஒரு கோடி நிதி வழங்கிய விஜய்க்கு, தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் நடிகர் சங்க கட்டடத்தை கட்ட சொந்த நிதி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் மற்றும் சங்க கட்டட வளர்ச்சிக்கு ரூ.25 கோடி வங்கி கடன் வாங்கிய வகையில், அதற்கு பிணைத் தொகை வழங்கிய கமல், கார்த்தி, உதயநிதி, சிவகார்த்திகேயன், நெப்போலியன், தனுசுக்கு ஆகியோருக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சங்க கட்டடப் பணிகளை தொடரும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கங்களின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திரைத்துறையில் வெளிவரும் பாலியல் புகார்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்து குறித்து பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ''பாலியல் புகார்கள் தொடர்பாக இனி நடிகர் சங்கம் அமைதியாக இருக்காது. பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக இன்னும் தீவிரமாக இருப்போம். சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்போம்'' என்றார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகை ரோகிணி, ''நடிகர் சங்க உறுப்பினர்களின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க நடிகர் சங்கம் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர்கள், சட்ட ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். பெண் உறுப்பினர்களுக்கு கமிட்டியை தொடர்பு கொள்ள போன் நம்பர், இமெயில் ஐடி வழங்கப்படும். இது போன்ற காலகட்டத்தில் பெண் உறுப்பினர்களுக்கு ஆண் உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புகார் குறித்து மீடியாவில் பேச வேண்டாம்'' என்று தெரிவித்தார்.
பின்பு நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நடிகை ரோகிணி, ''திரைத்துறையில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 2019ம் ஆண்டே கமிட்டி அமைக்கப்பட்டது. நடிகர், நடிகை மட்டுமின்றி திரைத்துறை உறுப்பினர்கள் யாரும் புகார் கொடுக்கலாம். எந்த ஒரு பெண்ணும் பயத்துடன் இயக்கக்கூடாது. புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. பெண் உறுப்பினர்களுக்கு புகார் எண் எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாசர், ''திரைத்துறையில் பாலியல் புகார்கள் குறித்து கமிட்டி உரிய நடவடிக்கை எடுக்கும். பாலியல் தொந்தரவு என்பது திரைத்துறையில் மட்டுமல்ல; அனைத்து இடங்களிலும் நடக்கிறது. ஆனால் திரைத்துறையில் உள்ளவர்களை மட்டும் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். பாலியல் புகார் கொடுத்தவரின் பெயர், விவரம் வெளியே தெரிவிக்கப்பட மாட்டாது'' என்று கூறினார்.
What's Your Reaction?