ட்ராமா திரைப்படம் விமர்சனம்: புதுசா இருக்கு..ஆனாலும்?
விவேக் பிரசன்னா, சாந்தினி நடிப்பில் வெளியாகியுள்ள ட்ராமா திரைப்படம் குறித்த குமுதம் இதழின் விமர்சனம் இதோ..

சமீப காலங்களில் தமிழில் சிறந்த திரைக்கதை அமைப்புடன் வந்திருக்கும் படம், 'ட்ராமா’ எனலாம். நான்லீனியர், ஹைப்பர்லிங்... என பல்வேறு நுட்பமான திரைக்கதைகளை, சிலந்திவலை போல் பின்னி, அதேசமயம் கதையை சிக்கல் இல்லாமல் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.
முதல் காட்சி... போலீஸ் சோதனையில் ஒரு காரும். அதன் டிக்கியில் ஒரு பிணமும் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. காரை ஓட்டி வந்தவர்கள் தப்பித்துவிட அவர்கள் யார்? டிக்கியில் பிணமாகக் கிடப்பவனைக் கொலை செய்தது யார்? அந்தக் கார் யாருடையது என்று மூன்று கேள்விகளை எழுப்பிவிட்டு, கதைக்குள் செல்கிறார் இயக்குநர்.
மூன்று கதைகளின் சங்கமம்:
தனித்தனியே நிகழும் மூன்று விதமான கதைகள்.. ஆனால், ஒன்றோடொன்று தொடர்பு உடையவை. ஒரு கதை, குழந்தை - இல்லாத தம்பதிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலைப் பற்றியது. அடுத்த கதை ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணின் காதல், அதனால் அவளது பெற்றோர்கள் படும் அவஸ்தைகளைப் பற்றியது. இன்னொன்று சில சில்லறை திருடர்களைப் பற்றிய காமெடி கதை
விவேக் பிரசன்னா, சாந்தினி, பூர்ணிமா, அனந்த் நாக், நமோ நாராயணன், சஞ்சீவ் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கின்றனர். அஜித் ஒளிப்பதிவும், ராஜ்பிரதாப் இசையும் புதுமையாக இருக்கிறது.
காமெடிதான் பொறுமையை சோதிக்கிறது. கிளைமேக்ஸில் ஓவர் கருத்து. சிக்கலான திரைக் கதையில் அந்தக் கார் மட்டும் கவனிக்கப்படாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, அதை வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பல், ஃபெர்டிலிட்டி சென்டர்களை மையமாக வைத்து இயங்குகிறது என்பது பகீர் கற்பனை. மொத்தத்தில் ட்ராமா திரைப்படம் ”பேட்டரி புதுசு.. வண்டி பழசு” !
What's Your Reaction?






