தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எதற்கு - எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி 

வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கலாச்சார மையங்களில் தமிழாசிரியர் பணியிடங்களுக்கு இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது எப்படி தகுதியாக இருக்க முடியும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்.

Sep 19, 2024 - 18:02
Sep 19, 2024 - 18:03
தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எதற்கு - எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி 
mp su.venkatesan

இந்தியக் கலாசார மையங்களில் உள்ள தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு எதற்காக இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கலாசார மையங்களில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதியாக இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Cultural Relations - ICCR) இம்மாதம் 13-ம் தேதி வெளியிட்ட  அறிவிப்பில் `குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் இந்திய மிஷன்கள்/ கலாசார மையங்களில் தமிழ்மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, அனுபவம், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை தங்களின் இணையதளப் பக்கத்தில் இருந்து பெறலாம் என்று தெரிவித்திருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியில் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.   இதற்கு எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்  “தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?வெளியுறவுத்துறையின் அப்பட்டமான இந்தித் திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம். வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்." என்று குறிப்பிட்டிருக்கிறார். எக்ஸ் தள பதிவு மட்டுமின்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் இயக்குநர் குமார் துஹின் ஆகிய இருவருக்கும்  சு.வெங்கடேசன் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow