ரவுடி ராமர் பாண்டி கொலை - உடலை வாங்க மறுத்து போராட்டம்.. உச்சக்கட்ட பரபரப்பு...
கரூரில் ராமர் பாண்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், 3-வது நாளாக உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், அனுப்பானடியை சேர்ந்த ரவுடி ராமர் பாண்டி என்பவர் மீது 6 கொலைகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, தனது நண்பருடன் இருசக்கரவாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த ராமர் பாண்டியை, அரவக்குறிச்சி தடா கோவில் அருகே காரில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. மேலும் ராமர் பாண்டியின் தலையை கொடூரமாக துண்டித்துவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது. காயமுற்ற கார்த்திக் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "அனுப்பானடியில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்த ராமர் பாண்டி, கடந்த 2012ஆம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு காரில் திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், முதல் குற்றவாளியாக ராமர் பாண்டி சேர்க்கப்பட்டார். மேலும் கடந்த ஆண்டு அனுப்பானடியில், 'பாபி' கார்த்திக் என்பவரை கொலை செய்தது உட்பட ஆறு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, மிரட்டல் என, 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் ராமர் பாண்டி மீது உள்ளது" என தெரிவிக்கின்றனர்.
இதனிடையே பாதுகாப்பு கருதி, பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்த வழக்கு, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், அப்படி ஆஜராகிவிட்டு திரும்பிய போது இந்த கொடூர கொலை அரங்கேறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவரக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அனுப்பானடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முன்பு அவரது உறவினர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் கொலையாளியை கைது செய்ய கோரியும் காவல்துறையை கண்டித்தும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்டோர், ராமர் மனைவியுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. உடலைப் பெற்றுக் கொள்ள காவல்துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் கொலையாளியை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்ள முடியும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?