குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து IUML கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உடனடித் தடைவிதிக்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்குக் குடியுரிமை வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் நோட்டீஸுக்கு பதில் அளித்த மத்திய அரசு விரிவான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை, சட்டம் அமல்படுத்தப்படாது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை முதல் குடியுரிமை திருத்த சட்டத்தினை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. இதன் மூலம் அந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் குடியுரிமைக்கு விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுத்துவதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இந்திய ஜனநாயாக வாலிபர் சங்கமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அதில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், அரசு சட்டத்தை அமல்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?