நீட் தேர்வு தொடக்கம்... பலத்த சோதனை.. எத்தனை பேர் பங்கேற்பு தெரியுமா?..
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்காக இன்று (மே 5) பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 557 நகரங்கள் என 571 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 24 லட்சம் பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்வை எழுதி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் மட்டும் 13 தேர்வு மையங்களில் 9,312 பேர் நீட் தேர்வு எழுதி வருகின்றனர்.
வழக்கம்போல் பலத்த சோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்கு மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். ஹால் டிக்கெட், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை தவிர வேறு பொருட்களை மாணவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், மாணவிகள் செயின், காதணி மற்றும் தலை முடியில் மாட்டியிருந்த கிளிப் உள்ளிட்டவைகளை கழற்றிய பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 14-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?