யானைக்கு அருகே சென்று புகைப்படம் - ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

யானைக்கு அருகில் சென்று சுய படம் எடுப்பது, ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் யானை மிரண்டு துரத்தி தாக்கும் அபாய நிலை உள்ளது.

Nov 21, 2023 - 11:12
Nov 21, 2023 - 15:11
யானைக்கு அருகே சென்று புகைப்படம்  - ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை கண்டதும் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் யானை மிரண்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் வறட்சி நிலவும்போது கர்நாடக மாநிலங்களில் இருந்து யானை கூட்டங்கள் இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வந்ததால் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைக் கூட்டங்கள் பெரிதளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறவில்லை. இருந்தபோதிலும் கூட்டத்தை விட்டு பிரிந்த ஒரு சில யானைகள் அவ்வப்போது மழையற்ற காலங்களில் தண்ணீர் தேடி பெண்ணாகரம் ஒகேனக்கல் சாலையை கடந்து செல்கின்றன. 

இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது ஒற்றை யானை தண்ணீர் தேடி சுற்றி வருகிறது. இந்த யானை ஒகேனக்கல் கணவாய் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுக்குடிநீர் திட்ட வடிகால் வாரியத்தில் இருந்து வெளியேறும் நீர் சேகரிக்கும் இடமான முண்டச்சி பள்ளம் தடுப்பணையில் தண்ணீர் அருந்திவிட்டு உணவு அருந்துவதற்காக பெண்ணாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரங்களில் நிற்கிறது.

ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் பயணிக்கும்போது சாலை ஓரத்தில் நின்றிருக்கும் யானையை கண்டதும் வாகனத்தை விட்டு இறங்கி அதன் அருகில் சென்று சுய படம் எடுப்பது, ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒற்றை யானை மிரண்டு துரத்தி தாக்கும் அபாய நிலை உள்ளது.

மேலும் மிரண்ட யானை சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை உடைத்து எறிகிறது. ஒகேனக்கல் வனப்பகுதிகளில் யானைகளைக் கண்டதும் சுற்றுலாப் பயணிகள் இறங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அந்த வழியாக சென்ற ஒரு சுற்றுலா பயணி தன்னுடைய செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவி விட்டுள்ளார்.அது தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வனப்பகுதியில் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொய்கை கோ.கிருஷணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow