“தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை” – நாடாளுமன்றத்தில் தீர்மானம்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்களவையில் எம்.பி. நிஷிகாந்த் துபே தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக இந்தியாவின் வலிமையே மக்கள் தொகைதான். அமெரிக்காவிற்கு இந்தியர்களின் தரவுகள் முக்கியம். வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிற்கு மோடி விற்றுவிட்டார். அமெரிக்காவிற்கு சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தாமல், மோடி அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் துபே, ‘‘இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஜார்ஜ் சோரஸ் போன்ற சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ராகுல் காந்தி எவ்வாறு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து மக்களவையில் இன்று (பிப். 12) தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன். அந்த தீர்மானத்தில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

