2024 Election: ரஜினி, தனுஷ், இளையராஜா… வரிசைக் கட்டி வாக்களித்த திரை பிரபலங்கள்!
2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தனுஷ், இளையராஜா ஆகியோர் வாக்களித்தனர்.
சென்னை: 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது. தமிழ்நாடு, புதுவை, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 20 மாநிலங்களில் காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை உட்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டுப் போட்டார். வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்ற ரஜினி, ஓட்டுப் போட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். அதேபோல், நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டை வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டார். அவரைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜா தியாகராயநகர் வாக்குச் சாவடி மையத்தில் ஓட்டுப் போட்டார்.
அதேபோல் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தனர். நடிகர் பிரபு தனது மனைவியுடன் ஓட்டுப் போட்டார். மேலும், வக்களிப்பது அனைவரது உரிமை, தயவுசெய்து எல்லாரும் வந்து ஓட்டுப் போடுங்க, வீட்டுல ரெஸ்ட் எடுக்காம அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இயக்குநர் பாரதிராஜா தனது மகன் மனோஜ் உடன் வாக்குச் சாவடி சென்று வாக்களித்தார். அதேபோல் காமெடி நடிகர் யோகி பாபு வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் ஓட்டுப் போட்டார். அதன் பின்னர் பேட்டிக் கொடுத்த அவர், மக்களுக்கு நல்ல தலைவர் வேண்டும், அதனால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
இயக்குநர் ஆர்வி உதயகுமார் தனது குடும்பத்தினருடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள டியுசிஎஸ் வளாகத்தில் வாக்களித்தார். மேலும் இயக்குநர்கள் அமீர், லிங்குசாமி, பிரசன்னா, சினேகா உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்களுக்கான வாக்குச் சாவடிகளில் சென்று ஓட்டுப் போட்டனர்.
What's Your Reaction?