ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ. நடந்து தப்பித்த   இளைஞர்

எங்களுக்கு திக் திக் என இருந்தாலும் வேறு வழியில்லாததால் உயிரை கையில் பிடித்து கொண்டு நடந்ததில் ஒரு வழியாக திருநெல்வேலியை அடைந்தோம்.

Dec 20, 2023 - 17:23
Dec 20, 2023 - 19:08
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ.  நடந்து தப்பித்த   இளைஞர்

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சொந்த ஊர் செல்வதற்காக தண்டவாளத்தில் 15 கிலோ மீட்டர் நடந்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்பு வரலாறு காணாத பெய்த கன மழையால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. சாலைகள் துண்டிக்கப்பட்டன. ரயில் தண்டாவாளத்தின் கீழ் மண் அரிப்பு ஏற்பட்டது. மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. இதனால் சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிமானவை கூட கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

கனமழை காரணமாக கடந்த ஞாயிற்றுகிழமை திருச்செந்தூரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட திருச்செந்தூர் எஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என 500க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.கிட்டதட்ட 40 மணி நேரத்திற்கு மேலாக பயணிகளை மீட்பப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உணவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ரயிலில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரான வினோத் என்பவர் ரயில் தண்டவாளத்திலேயே 15 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றுள்ளார்.அவருடன் பல பயணிகள் நடந்து வந்து பின்னர் கார், பஸ்ஸில் ஏறி சொந்த ஊர் திரும்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து வினோத்திடம் பேசினோம், ”நான் கடந்த சனிக்கிழமை இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு ரயிலில் சென்றேன். ஞாயிற்று கிழமை சாமி தரிசனம் செய்து விட்டு அன்று இரவே திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தஞ்சாவூருக்கு புறப்பட்டோம். நாங்கள் கோவில் இருந்து கிளம்பும் போதே முட்டிக்கால் அளவிற்கு தண்ணீர் சாலைகளில் ஓடியது. ஸ்டேஷனுக்கு செல்வதற்கு ஆட்டோ கிடைக்கவில்லை. ஒரே ஒரு வேன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது அதில் ஏறி ஸ்டேஷனுக்கு சென்று ரயிலில் ஏறினோம்.அதன் பின்னர் இனி பிரச்னை இருக்காது என நினைத்தேன். 

ரயிலும் புறப்பட்டது பயணிகள் அனைவரும் ரயிலை பிடிப்பதற்கே பெரும் பாடுபட்டதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வாங்கி கொள்ளலாம் என யாருமே உணவு வாங்காமல் வந்து விட்டனர்.இந்நிலையில் சுமார் 9.30 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் வந்தடைந்தது ரயில். அங்கு ரொம்ப நேரம் ரயில் புறப்படாமல் நின்று கொண்டிருந்தது. டிடிஆரிடம் என்னவென்று கேட்டதற்கு சிக்னல் கிடைக்கவில்லை என சொன்னார்.

இரவு 11.55 மணியளவில் ரயில் கேன்சல் ஆகிவிட்டதாக எல்லோருக்கும் மெசேஜ் வந்தது. ஸ்டேஷன் முழுவதும் மழை நீர் சூழ்ந்திருந்தது. அங்கு வந்த இளைஞர்கள் சிலர் பக்கத்தில் உள்ள குளம் உடைந்து விட்டது. இனி தண்ணீர் அதிகமாகும் எல்லோரும் ரயிலில் இருந்து இறங்குங்கள் என்றனர். 

ரயிலில் இருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. முன்கூட்டியே அறிந்து ரயிலை எடுக்காமல் இருந்திருந்தால் கூட திருச்செந்தூரிலேயே தங்கியிருக்கலாம் என புலம்பினர்.குழந்தைகள், வயதானவர்கள் உணவு இல்லாமல் தவித்தனர். அந்த இரவு ரயிலில் இருந்த அனைவருக்கும் அவஸ்தையாகவே இருக்க ஒரு வழியாக விடிந்தது. பசி தாங்க முடியாத சிலர் மூன்று கிலோ மீட்டர் சுற்றி போய் இருந்த ஒரு பெட்டிக்கடையில் கிடைத்ததை வாங்கி சாப்பிட்டு சமாளித்தனர். 

புதுக்குடியிலிருந்து வந்த வயதான மூதாட்டி ஒருவர் சுக்கு மல்லி காபி போட்டு வந்து ரயிலில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கும் கொடுத்தார். 

பின்னர் ஊருக்குள் சென்ற அவர் சாப்பாடு இல்லாமல் தவிப்பதை சொல்ல புதுக்குடி ஊர் மக்கள் அங்கிருந்த காளியம்மன் கோவிலில் இருந்த பொருள்களை வைத்து சமைத்து கொடுத்தனர். அந்த ஊர் மக்கள் ரயிலில் இருந்த அனைவருக்கும் கடவுளாக தெரிந்தனர். ஒரு வழியாக திங்கள் கிழமையை கடந்து விட்டோம். நேற்று காலை ஹெலிகாப்டர் ஒன்று ரயில் நிலையத்தை வட்டமடித்தது. சாப்பாடு கொண்டு வந்துள்ளார்கள் என எல்லோரும் காத்திருந்தோம்.ஆனால் வட்டமடித்து விட்டு திரும்பி சென்று விட்டது.

இந்நிலையில் ரயிலில் இருக்கும் தன் பெற்றோரை மீட்டு செல்வதற்காக திருச்சியிலிருந்து காரில் வந்த இளைஞர் ஒருவர் காரை செய்துங்கநல்லூர் என்ற ஊரில் நிறுத்தி விட்டு ரயில் தண்டவாளத்திலேயே சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே ஸ்ரீவைகுண்டம் வந்தார். ரயிலில் இருந்த அவரது பெற்றோர் மகனை பார்த்ததும் கட்டி தழுவி கொண்டனர்.அவரோட அக்கா குழந்தைகள் மாமா என வாரி அணைத்து கொண்டனர். 

அந்த இளைஞர் அவரது குடும்பத்தினரை ரயில்வே தண்டவாளத்தில் நடக்க வைத்து அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் வேண்டாம்பா.. அரசு நம்மை மீட்க நடவடிக்கை எடுப்பாங்க ரிஸ்க் எடுக்காதீங்க என்றனர். 

ரயில் நின்று 40 மணி நேரம் ஆகப்போகுது இதுவரை யாரும் எட்டிப்பார்க்கவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். நான் தண்டவாளத்தில் நடந்துதான் வந்தேன். அதோ போல் கவனமாக அழைத்துக்கொண்டு செல்கிறேன் என கூறிவிட்டு அந்த இளைஞர் சென்றுவிட்டார்.

இது என்னை போன்ற பலருக்கு நம்பிக்கை தந்தது.ஒரு இளைஞர் தனி ஆளாக தன் பெற்றோரை மீட்பதற்காக தண்டாவளத்திலேயே நடந்து வரும்போது ஏன் அரசு தரப்பிலிருந்தோ ரயில்வே தரப்பிலிருந்தோ எங்களை சந்திக்கவும், உணவு கொடுக்கவும் வர முடியாமல் போனது என்பது எங்களுக்கு பெரும் கேள்வியாக இருந்தது. இதனை தொடர்ந்து நான் உள்ளிட்ட பலர் ரயிலில் இருந்து இறங்கி நேற்று காலை 10 மணியளவில் தண்டவாளத்தில் நடக்க தொடங்கினோம். பெண்கள், குழந்தைகள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் பேர் நடக்க தொடங்கினர். எதிரில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்தும் மக்கள் தண்டவாளத்தில் நடந்து வந்தனர். இதில் ஆபத்து ஏதும் இல்லை என்பதை உணர்ந்து தைரியமாக நடக்க தொடங்கினோம். 

இடையில் பல இடங்கள் வெள்ளக்காடாக இருந்தது. தண்டவாளத்தின் கீழ் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது.எங்களுக்கு திக் திக் என இருந்தாலும் வேறு வழியில்லாததால் உயிரை கையில் பிடித்து கொண்டு நடந்ததில் ஒரு வழியாக திருநெல்வேலியை அடைந்தோம். பின்னர் நான் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன். அவரவர் வசதிகேற்ப பேருந்து உள்ளிட்டவையில்  ஏறி சொந்த ஊருக்கு சென்றனர். 

15 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க நான்கு மணி நேரம் ஆனது. அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் 40 மணி நேரத்திற்கு மேலாக தவித்த தவிப்பு ரயிலில் இருந்த பயணிகளுக்கு மட்டுமே தெரியும். அதை அவர்கள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள் நானும்தான்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow